ஆன்மிகம்
பெரியகோவில் மகா நந்திக்கு அபிஷேகம் நடைபெற்றதையும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததையும் காணலாம்.

தஞ்சை பெரியகோவிலில் மகாநந்திக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2020-09-30 03:40 GMT   |   Update On 2020-09-30 03:40 GMT
பிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவில் மகாநந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரிய கோவிலை மூட தொல்லியல் துறை உத்தரவிட்டது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் பெரியகோவில் மூடப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவிலில் வழக்கமாக நடைபெறும் நான்கு கால பூஜைகள் நடந்தன.

பிரதோஷ தினத்தன்று பெரியகோவில் மகாநந்திக்கு திரவியப்பொடி, பால், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கோவில் மூடப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் முறையாக பக்தர்கள் இன்றி பிரதோஷம் நடந்தது.

கொரோனா பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அளித்தன. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது. வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பிரதோஷத்தையொட்டி நேற்று மகாநந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவிலுக்குள் வந்த பக்தர்களின் கைகளில் ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். பின்னர் வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. பிரதோஷத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அமருவதற்காக சமூக இடைவெளியுடன் வட்டம் போடப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டனர்.

பின்னர் மகாநந்திக்கு திரவியப்பொடி, பால், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழக்கமாக பிரதோஷ வழிபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். ஆனால் நேற்று குறைவான பக்தர்களே பங்கேற்றனர்.
Tags:    

Similar News