ஆன்மிகம்
தலைக்காவிரி

தலைக்காவிரியில் வருகிற 17-ந்தேதி காவிரி தீர்த்த உற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

Published On 2020-10-05 06:38 GMT   |   Update On 2020-10-05 06:38 GMT
தலைக்காவிரியில் வருகிற 17-ந்தேதி காவிரி தீர்த்த உற்சவம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா பாகமண்டலா அருகே தலைக்காவிரி உள்ளது. இங்கு தான் காவிரி ஆறு உற்பத்தி ஆகி தமிழகம், புதுச்சேரிக்கு பாய்ந்தோடி வருகிறது. தலைக்காவிரியில் காவிரி தாய்க்கு சிலை எழுப்பி கோவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இங்கு காவிரி ஆறு நீரூற்றாக உருவெடுத்து செல்கிறது. காவிரி தாயை சிறப்பிக்கும் வகையில் இந்த இடத்தில் ஆண்டுதோறும் காவிரி தீர்த்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

அதுபோல் இந்த ஆண்டுக்கான காவிரி தீர்த்த உற்சவம் வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7.03 மணி அளவில் நடக்கிறது. இதையொட்டி காவிரி உற்பத்தி ஆகும் நீரூற்றுக்கும், காவிரி தாய்க்கும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அதன் பின்னர் அந்த நீரூற்றில் இருந்து பக்தர்கள் குடங்களில் தங்களது வீடுகளுக்கு புனித நீரை பிடித்துச் செல்வார்கள். இந்த விழாவில் கர்நாடகம் மட்டுமின்றி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், காவிரி தீர்த்த உற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனா பரவலை தக்கும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதுபோல் காவிரி தீர்த்த உற்சவத்தில் பங்கேற்க வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்துகொள்ள முடியும். அவர்கள் கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News