செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்- அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Published On 2021-06-08 08:21 GMT   |   Update On 2021-06-08 08:21 GMT
கொரோனாவுக்கு எதிராக போராடும் நாடுகளுக்கு அமெரிக்கா 8 கோடி தடுப்பூசிகளை பகிர்ந்து அளிக்கும் என கூறிய ஜோ பைடன், குறிப்பாக இந்தியாவுக்கு அதிக உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

வாஷிங்டன்:

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்ட உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் தடுப்பூசி பற்றாக்குறையும் நிலவுகிறது.

இதையடுத்து இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிகளை அனுப்பின. அமெரிக்காவும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, “8 கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா கொரோனாவுக்கு எதிராக போராடும் நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கும் என்று தெரிவித்தார். குறிப்பாக இந்தியாவுக்கு அதிக உதவிகள் செய்யப்படும்” என்று கூறினார்.


இந்த நிலையில் இந்தியாவுக்கு கூடுதலாக தடுப்பூசிகள், தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடனை அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் மாகாண கவர்னர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்.பி. டெட் குரூஸ் கூறியதாவது:-

இந்தியா, அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடு. ஜோ பைடனின் தடுப்பூசி பகிர்ந்து அளிக்கும் திட்டம் குறைவாக இருக்கிறது. இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்த நெருக்கடியான சூழலில் இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படும் தடுப்பூசிகள் அவர்களுக்கு கிடைக்கிறதா? என்பதை ஜோ பைடன் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே போல் மற்றொரு எம்.பி. ரோஜர் விக்கர் கூறும்போது, “கொரோனா வைரசை தோற்கடிக்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா உதவுவது முக்கியமானது” என்றார்.

டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அபோட் டுவிட்டரில் கூறும்போது, “இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடி மற்றும் பேரழிவு காரணமாக ஜோ பைடனிடம் இருந்து கூடுதல் நடவடிக்கை தேவைப்படுகிறது.

கொரோனா வைரசை எதிர்த்து போராடும் நமது மிக முக்கியமான உலகளாவிய கூட்டாளிகளில் ஒருவருக்கு கூடுதல் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News