செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மாபெரும் பேரணி

Published On 2020-10-27 00:37 GMT   |   Update On 2020-10-27 00:37 GMT
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி நடத்தின.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன் ஷாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.

அவர் தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் அப்போதிலிருந்தே குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இ இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்கிற கூட்டணியை கடந்த மாதம் அமைத்தன.

இந்த இயக்கத்தின் மூலம் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பேரணிகள், பொதுகூட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இறுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தவும் முடிவு செய்துள்ளன.

அதன்படி இந்த மாத தொடக்கத்தில் பஞ்சாப் மாகாணம் குஜர்ன்வாலா நகரிலும், சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியிலும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் சார்பில் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்த வரிசையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவாவில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் 3-வது பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவத் பஜ்வாவும், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீத் ஆகிய இருவரும்தான் பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

2018-ம் ஆண்டு தேர்தலின்போது பாராளுமன்றத்தில் குதிரை பேரம் செய்து மக்களின் விருப்பத்துக்கு எதிராக இம்ரான் கானை பிரதமராக்கியதற்காகவும், அரசியலமைப்பையும் சட்டங்களையும் கிழித்து மக்களை பசி மற்றும் வறுமையை நோக்கி தள்ளியதற்காகவும் ராணுவத்தளபதி பஜ்வா பதில் சொல்ல வேண்டும்.

ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீத் பதவி பிரமாணத்தின் போது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறி பல ஆண்டுகளாக அரசியலில் தலையிட்டு வருகிறார்.

எனது ராணுவம் அவதூறு செய்யப்படுவதை நான் விரும்பவில்லை. அதனாலேயே நான் தனி நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு குற்றம் சாட்டுகிறேன்.

பாகிஸ்தானை உள்ளேயும் வெளியேயும் வெற்றுத்தனமாக்கிய அரசியலமைப்பற்ற அதிகாரங்களுக்கு எதிராக பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் எழுந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதேபோல் நவாஸ் ஷெரீப்பின் மகளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான மரியம் நவாஸ் இந்த பொதுக்கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தற்போதைய சர்வாதிகார ஆட்சி மீது சூரியன் மறையப்போகிறது என்றும் ராணுவத்தின் கைப்பாவையாக அரசு இருப்பது முடிவுக்கு வர உள்ளது என்றும் கூறினார்.
Tags:    

Similar News