ஆன்மிகம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து

Published On 2021-04-13 05:09 GMT   |   Update On 2021-04-13 05:09 GMT
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவையொட்டி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் கொடியேற்றம் தொடங்கி, ஒரு வாரத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் முக்கிய நிகழ்ச்சியாக சிவபக்தியில் சிறந்த செட்டிப் பெண்ணுக்கு தாயுமான சுவாமி அவளது பேறுகாலத்தில் அவளது தாயாக வந்து மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சியான செட்டிப்பெண் மருத்துவம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவை நடக்கும்.

சென்ற ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா, சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடந்த இருவாரங்களுக்கு முன்பு தெப்பத்திருவிழா நடைபெற்றது.

இந்தநிலையில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவிலிலும் திருவிழாக்கள் நடைபெறவில்லை. மேலும் நோய் தொற்றை தடுக்கும் விதமாக கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு திருவிழாக்கள் நடைபெறாது என்று மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை (புதன்கிழமை) தமிழ் புத்தாண்டுக்கும் எந்தவிதமான சிறப்பு ஏற்பாடும் நடைபெறவில்லை. வழக்கம்போல கோவிலில் அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்றும், இதில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் பாதுகாப்பாக தரிசனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News