செய்திகள்
சிறுகனூரில் கண்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்த போது எடுத்தபடம்.

ஓடும் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ- ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2021-02-15 12:36 GMT   |   Update On 2021-02-15 12:36 GMT
சிறுகனூரில் ஓடும் கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
சமயபுரம்:

சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி கண்டெய்னர் பொருத்தப்பட்ட சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த லாரியை ஜீவா (வயது 35) ஓட்டி வந்தார். அந்த லாரியில் ஜவுளி பண்டல்கள், ஏ.சி. எந்திரங்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட மரச்சாமான்கள் உள்பட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்தன.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் அந்த லாரி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் என்ற இடத்தில் வந்த போது அதன் முகப்பு விளக்கு திடீர் என வெடித்தது. அப்போது ஏற்பட்ட மின் கசிவால் லாரி முழுவதும் தீ பிடித்து எரிந்தது. லாரி எரிவதை கண்டதும் டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கி உயிர் தப்பினார்.

பின்னர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனே, மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி கருணாகரன் மற்றும் சமயபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) ஆரோக்கியசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் லாரியின் என்ஜின் உள்பட சில பாகங்கள் மற்றும் லாரியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News