செய்திகள்
டிரம்ப்

கொரோனாவை மீண்டும் குறைத்து மதிப்பிட்ட டிரம்ப்: வலைத்தள பதிவை நீக்கியது பேஸ்புக்

Published On 2020-10-07 09:03 GMT   |   Update On 2020-10-07 09:03 GMT
கொரோனா தொடர்பாக, விதிமுறைகளுக்கு மாறான தகவல்களை வெளியிட்டதாக டிரம்பின் பதிவை பேஸ்புக் நிறுவனம் நீக்கி உள்ளது.
வாஷிங்டன்:

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அதன்பின்னர் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது,  ஆரம்பகாலத்தில் கொரோனா வைரசை குறைத்து மதிப்பிட்டது போன்று, இப்போது பருவகால காய்ச்சலுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

‘காய்ச்சல் காலம் தொடங்க உள்ளது. பருவகால காய்ச்சலுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகள் நேரிடுகிறது. தடுப்பு மருந்து இருந்தும் சில நேரங்களில் ஒரு லட்சத்தை தாண்டி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதற்காக நாட்டின் நிர்வாகத்தை நாம் மூடப் போகிறோமா? இல்லை. கொரோனா வைரசுடனும் நாம் இணைந்து வாழ கற்றுக்கொள்வதைப் போன்று, அந்த வைரஸ்களுடன் இணைந்து வாழ கற்றுக்கொண்டோம். பெரும்பாலான மக்களுக்கு வைரஸ் பரவினாலும் உயிரிழப்பு மிக்குறைவு’ என்று டிரம்ப் கூறியிருந்தார்.

உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி உயிர்ப்பலி வாங்கி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த கருத்து தங்களின் கொரோனா கால விதிமுறைகளை மீறி மக்களை தவறாக வழிநடத்தியதாக கூறி, டிரம்பின் பதிவை பேஸ்புக் நீக்கி உள்ளது. அதேசமயம் டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை வாசகங்களுடன் அந்த பதிவை மறைத்துள்ளது.
Tags:    

Similar News