செய்திகள்
சங்கிலிப்பாறை ஓடையில் சிக்கிக்கொண்ட பக்தர்களை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.

கனமழை- சதுரகிரி மலைக்கோவிலில் 200 பக்தர்கள் தவிப்பு

Published On 2019-11-10 06:56 GMT   |   Update On 2019-11-10 06:56 GMT
கனமழையால் ஓடைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் சதுரகிரி மலைக்கோவிலில் 200 பக்தர்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் பேரையூர்-சாப்டூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. தரை மட்டத்திலிருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோ‌ஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத் துறை சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

நேற்று பிரதோ‌ஷத்தை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் குழுவாகவும், தனியாகவும் மலைக் கோவில் சென்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குப்பாறை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


இதனால் சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கி வந்த பக்தர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சங்கிலிப் பாறை ஓடையை கடக்க முடியாமல் தவிப்புக்குள்ளானார்கள். அவர்கள் மலைக்கோவிலுக்கு மீண்டும் செல்லவும், கீழே இறங்கவும் வழியின்றி நடு வழியில் மாட்டிக்கொண்டனர்.

இதுகுறித்து தீயணைப்பு, வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் உரிய உபகரணங்களுடன் சங்கிலிப்பாறை ஓடைக்கு விரைந்தனர். அங்கு மழைநீர் ஓடையில் பெருக்கெடுத்து ஓடியதை பார்த்ததும் இரு கரைகளிலும் கயிறு கட்டினர். அதைத்தொடர்ந்து அவர்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பக்தர்களை பத்திரமாக மீட்டனர்.

மேலும் கோவிலுக்கு சென்ற 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாததால் கோவில் மலைப்பகுதியிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த உதவி கலெக்டர் தினேஷ் குமார் மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டு பக்தர்களை மீட்ட மீட்புக் குழு வினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதற்கிடையில் பிரதோசத்தை முன்னிட்டு 3 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி செல்ல வழங்கிஇருந்த அனுமதிக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. கோவில்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 200 பக்தர்களையும் வெள்ள நீர் குறைந்த பிறகு கீழே அழைத்துவரவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News