செய்திகள்
கோப்புபடம்

ஏர்கலப்பையால் ஆடிப்பட்டத்துக்கு உழவு

Published On 2021-07-21 09:02 GMT   |   Update On 2021-07-21 09:02 GMT
ஏர் கலப்பையால் உழவு செய்யும் போது அதிக ஆழத்துக்கு உழவு செய்ய முடியும்.
உடுமலை:

பருவமழையை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் விவசாயத்தில் விளைநிலத்தை உழவு செய்வது முக்கிய பங்கு வகிக்கிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் கோடை உழவு காரணமாக பயிர்களை தாக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கிடைப்பதாக வேளாண்துறை தெரிவிக்கிறது.

அதேபோல் மழைக்காலத்தில் மேற்கொள்ளப்படும் உழவு, விளைநிலத்தில் மழை நீரை உள்வாங்கி மண் வளத்தை பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தநிலையில் உழவு செய்ய டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்கள் பயன்பாடு அதிகரித்தாலும் காளைகளை பயன்படுத்தி ஏர் உழவு செய்யும் பாரம்பரிய முறையை இன்றளவும் உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.

முன்பு ஆடிப்பட்டம் உள்ளிட்ட அனைத்து பட்டங்களிலும் சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை உள்ளிட்ட மானாவாரி சாகுபடி விதைப்புக்கு ஏர் உழவு முறையே பின்பற்றப்பட்டு வந்தது. உழவுக்குத்தேவையான காளைகளை பராமரிப்பதில் அதிகரித்த செலவினங்கள், முறையாக பயிற்சி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவு, எந்திரங்கள் வருகை உள்ளிட்ட காரணங்களால் ஏர் உழவு முறை படிப்படியாக குறைந்தது.

இருப்பினும் சிலர் தற்போதும் ஏர் கலப்பையால் விளைநிலத்தை உழுது ஆடிப்பட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஏர் கலப்பையால் உழவு செய்யும் போது அதிக ஆழத்துக்கு உழவு செய்ய முடியும். இதனால் மழைக்காலத்தில் கூடுதலாக மழை நீர் விளைநிலத்தில் தேங்குவது உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. நடைமுறை சிக்கல்களால் தற்போது சீசன் சமயங்களில் எந்திர உழவு முறையே கைகொடுக்கிறது என்றனர்.
Tags:    

Similar News