செய்திகள்
கல்யாணி அணை

திருப்பதியில் தொடர் மழை - 5 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2019-12-04 06:41 GMT   |   Update On 2019-12-04 06:41 GMT
திருப்பதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 5 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும், உள்ளூர் மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருமலை:

திருப்பதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 5 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும், உள்ளூர் மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களும், விழா நாட்களில் ஒரு லட்சம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகள், வியாபார நிறுவனங்களில் அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. திருமலையில் ஒட்டுமொத்த பயன்பாட்டுக்கு தினமும் 32 லட்சத்தில் இருந்து 35 லட்சம் கேலன் வரை தண்ணீர் செலவாகிறது.

அந்த தண்ணீர் திருமலையில் உள்ள குமாரதாரா, பசுபுதாரா, ஆகாச கங்கை, பாபவிநாசனம், கோகர்ப்பம் ஆகிய 5 அணைகளில் இருந்தும், திருப்பதி அருகில் உள்ள கல்யாணி அணையில் இருந்தும் வினியோகம் செய்யப்படுகிறது. திருமலையில் உள்ள 5 அணைகளில் இருக்கும் தண்ணீர் இருப்பு நிலவரம் பற்றி கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி கணக்கெடுத்த போது, அன்றைய நாளில் இருந்து 102 நாட்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு இருப்பதாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து திருமுலையில் சமீப காலமாக விட்டு விட்டு மழை பெய்ததால், 5 அணைகளில் ஓரளவுக்கு நீர் நிரம்பியது. செப்டம்பர் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் 14-ந் தேதி வரை பெய்த மழையால், மேலும் 144 நாட்களின் பயன்பாட்டுக்கு தண்ணீர் போதுமானதாக இருந்தது.

தற்போது திருமலையில் இரவு பகலாக 5 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் திருமலையில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகளும், நீருற்றுகளும், காட்டாறுகளும் உருவாகி உள்ளது.

அவைகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் 5 அணைகளுக்கு வந்து சேருகிறது. இதனால் 5 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும், உள்ளூர் மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமலையில் உள்ள 5 அணைகளில் மொத்தம் சேர்த்து 65 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீர் ஓராண்டுக்கு பயன்படுத்தலாம். 5 அணைகளிலும் சேர்த்து மொத்தம் 13,849 லட்சம் கேலன் தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும். தற்போது 12,063 லட்சம் கேலன் தண்ணீர் இருப்பு மட்டுமே உள்ளது.

மேலும் திருமலையில் தொடர்ந்து மழை பெய்தால், அங்குள்ள அனைத்து அணைகளும் எளிதில் நிரம்பி விடும்.

Tags:    

Similar News