செய்திகள்
கோப்புபடம்

தாளவாடியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2021-10-09 14:21 GMT   |   Update On 2021-10-09 14:21 GMT
நிலுவை தொகையை வழங்கக்கோரி சத்தியமங்கலம், தாளவாடியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு உள்பட்ட 15 ஊராட்சிகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் நேற்று பகல் 11 மணி அளவில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.கே.முருகன் தலைமை தாங்கினார். தங்களுக்கு பல வாரங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள ரூ.273-ஐ முழுமையாக வழங்க வேண்டும். முழுமையாக 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை கோஷங்களாக முழங்கினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்தியமங்கலம் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார், கடம்பூர் வட்டார செயலாளர் கே.ராமசாமி, சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.சுரேந்தர், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரத்குமார், விவசாய சங்க நிர்வாகி சேகர் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் கொடுத்தார்கள்.

இதேபோல் தாளவாடி ஒன்றியத்தில் உள்ள மல்லன்குழி, பையனாபுரம், திகனாரை, ஆசனூர், கேர்மாளம், தலமலை, தாளவாடி, திங்களூர், நெய்தாளபுரம், இக்களூர் ஆகிய ஊராட்சிகளில் சுமார் 13 ஆயிரத்து 239 பேர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.

பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பிரேம்குமார், ஆனந்தன் ஆகியோரிடம் மனு அளித்தனர். அதற்கு அதிகாரிகள், ‘விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்று தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News