முக்கிய விரதங்கள்
விஷ்ணு

வெற்றியைத் தரும் விஜயா ஏகாதசி விரதம்

Published On 2022-03-28 04:03 GMT   |   Update On 2022-03-28 08:47 GMT
பங்குனி மாதம் தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசி அன்று, பெருமாளை தரிசிப்பதும், அவருக்கு துளசி மாலை சூட்டி வழிபாடு செய்வதும் மகத்தான பலனை பெற்றுத்தரும்.
தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்புக்குரியதாக ‘பங்குனி மாதம்’ உள்ளது. இந்த மாதத்தை ‘மங்கலம் நிறைந்த மாதம்’ என்றே வர்ணிப்பார்கள். ஏனெனில் இந்த மாதத்தில்தான் தெய்வங்களின் திருமணங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த பங்குனி மாதத்தில் நாம் முறையாக தெய்வங்களை வழிபட்டு வந்தால், நம் வாழ்வில் வரும் பல தடைகளும் விலகும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளில் வரும் ஏகாதசி திதிகள் சிறப்பு வாய்ந்தவை. மாதத்திற்கு இரண்டு ஏகாதசி என்று, வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உண்டு. சில வருடங்கள் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. இவை அனைத்திற்கும் தனித் தனியாக பெயர்கள் இருக்கின்றன. அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை ‘விஜயா ஏகாதசி’ என்பார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பு பற்றி இ்ங்கே பார்க்கலாம்.

எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை எல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி மாதம் தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசி அன்று, பெருமாளை தரிசிப்பதும், அவருக்கு துளசி மாலை சூட்டி வழிபாடு செய்வதும் மகத்தான பலனை பெற்றுத்தரும்.

‘ராவணனால் சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கும் சீதையை, இலங்கைக்குச் சென்று எப்படி மீட்பது?’ என்ற ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார், ராமபிரான். அப்போது அந்த வழியாக வந்த முனிவர் ஒருவர், ராமனிடம் ‘விஜயா ஏகாதசி’ விரதத்தின் மகிமையை எடுத்துக்கூறி, அந்த விரதத்தை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்திச் சென்றார். அதன்படியே ராமபிரான், விஜயா ஏகாதசி அன்று விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டார். அதன்பலனாக, இலங்கை சென்று ராவணனை வென்று சீதையை மீட்டு வந்ததாக ஏகாதசி விரத மகாத்மியம் எடுத்துரைக்கிறது.

விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தம்பதி இடையே விட்டுக்கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலும் அதிகமாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பதுஐதீகம்.

மறு நாள் துவாதசி அன்று, யாருக்கேனும் உணவு வழங்கினால், மகா புண்ணியம் என்றும், பூஜை செய்த கலசம் மற்றும் தானியங்களை ஆச்சார்யருக்கு வழங்கி நமஸ்கரித்தால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல், பங்குனி மாதத்தில், குரு வாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமைகளில், சிவ வழிபாடு மேற்கொள்வதும் சிவகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.
Tags:    

Similar News