செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - மேலும் ஒரு சென்னை மாணவியிடம் போலீசார் விசாரணை

Published On 2019-10-12 06:54 GMT   |   Update On 2019-10-12 06:54 GMT
நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி தொடர்பாக சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவியிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் உதித் சூர்யா, பிரவீன், ராகுல் மற்றும் அவர்களது தந்தையர் வெங்கடேசன், சரவணன், டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர் இர்பான், சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். அவரது தந்தை முகமது சபியிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி டாக்டர் என தெரிய வரவே அவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே நீட் தேர்வு மோசடியில் பிடிபட்ட மாணவி அபிராமி விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.

தற்போது சென்னை, சவிதா மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரியங்கா என்பவரும் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாணவியையும் அவரது தாயாரையும் நேற்று இரவு தேனிக்கு அழைத்து வந்தனர்.



இன்று காலை முதல் அவரிடம் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவர் எந்த நீட் பயிற்சி மையத்தில் பயின்றார்? மருத்துவ கல்லூரியில் சேர எவ்வளவு பணம் கொடுத்தார்? புரோக்கர்கள் யாரையேனும் அணுகினாரா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று தேனி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த மாணவர்கள் பிரவீன், ராகுல் மற்றும் அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோர்களது மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பன்னீர்செல்வம் தெரிவிக்கையில், இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான புகார்தாரர் யார்? என இதுவரை கண்டறியப்படவில்லை. மாணவர்கள் படிக்கும் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு கமிட்டி உறுப்பினர்களை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை. புரோக்கர் ரசீத்தை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை?

மாணவர் பிரவீன் படித்த கல்லூரி, தேனி மருத்துவ கல்லூரியில் ஆவண முறைகேட்டுக்கு துணை போனது யார் என ஏன் இன்னும் கண்டறியவில்லை? முக்கிய வழக்கான இதில் குறிப்பானை அலுவலரை நியமித்து அதனை குறிப்பெடுத்திருந்தால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டு இருக்காது. அதனை ஏன் இன்னும் செய்யவில்லை? என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த போலீசார், புரோக்கர் ரசீத்தை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறோம். கல்லூரிகளில் முறைகேடு நடத்தியவர்கள், தவறை கண்டறிந்த விசாரணைக்குழு அலுவலர்கள், முதல்வர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிற 14-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்வதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் 4 பேரின் நீதிமன்ற காவலை வருகிற 25-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

தலைமறைவாக உள்ள புரோக்கர்கள் ரசீத் மற்றும் வேதாச்சலம் ஆகியோர் பிடிபட்டால் மட்டுமே வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News