ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: துர்க்கை அம்மன் உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2020-11-18 05:59 GMT   |   Update On 2020-11-18 05:59 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் சில பக்தர்கள் கோவில் வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு எல்லை தெய்வ வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். அதன்படி, நேற்று திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

வழக்கமாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியுலா வருவார். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாடவீதியுலா ரத்து செய்யப்பட்டதால் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்திலேயே உலா வந்தார். அப்போது கோவில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் சில பக்தர்கள் கோவில் வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News