செய்திகள்
களக்காடு அருகே உள்ள கீழகருவேலங்குளத்தில் உதயநிதி பிரசாரம் செய்த போது எடுத்த படம்.

செயல்படாத ஆட்சி என்றால் அது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான்- உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

Published On 2019-10-18 05:17 GMT   |   Update On 2019-10-18 05:17 GMT
தமிழகத்தில் செயல்படாத ஆட்சி என்றால் அது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான் என்று நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர், கீழக்கருவேலங்குளம் பகுதிகளில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

6 மாதங்களுக்கு முன்பு நான் பாராளுமன்ற தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு வந்தேன். நீங்கள் மிகப்பெரிய வெற்றியை தந்து, அவரை வெற்றி பெற செய்தீர்கள். அதுபோல ரூபி மனோகரனையும் வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் முதலிடத்தில் உள்ளது. அது போல ஒட்டு எண்ணிக்கையின் போதும் முதலிடத்தில் வர வேண்டும். செயல்படாத ஆட்சி என்றால் அது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான்.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 39 தொகுதிகளில் வெற்றியை தந்து, அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு மிகப்பெரிய அடி கொடுத்தீர்கள். தமிழகத்திற்கு வரும்போது எல்லாம் மோடி மாறுவேடத்தில் வருகிறார். மாமல்லபுரத்திற்கு வில்லன் போல் மாறு வேடத்தில் வேட்டி அணிந்து வந்த பிரதமர் மோடி கடற்கரையில் பாட்டில்கள் எடுத்தார். இதை படம் எடுக்க மும்பையில் இருந்து 15 பேர் கொண்ட குழு வந்துள்ளது.

நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானேன் என மனசாட்சி இல்லாமல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். நீட் தேர்வு வராது என்று ஏமாற்றி மாணவி அனிதாவின் சாவுக்கு காரணமான இவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது நியாயமா?.

இந்த 2 இடைத்தேர்தல்களும் ஆட்சி மாற்றத்தை கொடுக்கப்போவதில்லை. ஆனால் இந்த ஆட்சி மீது உங்களுக்குள்ள அவநம்பிக்கையை பதிவு செய்ய வேண்டிய தேர்தல் ஆகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 90 நாட்களாக மருத்துவமனையில் அடைத்து வைத்து கவர்னர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், அவரது சொந்தக்காரர்களை கூட பார்க்க விடாமல் தடுத்து விட்டனர். அவர் எப்படி இறந்தார் என்பது இன்று வரை தெரியாமல் ரகசியமாகவே உள்ளது. தி.மு.க. ஆட்சி வந்ததும் அந்த உண்மை வெளிவரும். எனவே கை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜார்ஜ்கோசல், களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜன், ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ்வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News