செய்திகள்
கொரோனா வைரஸ்

தியாகதுருகம் அருகே கொரோனா அச்சத்தால் வேப்பிலை தோரணங்களை கட்டிய பொதுமக்கள்

Published On 2021-05-15 12:44 GMT   |   Update On 2021-05-15 12:44 GMT
கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக கிராம மக்கள் அனைத்து தெருக்களிலும் குறுக்கே வேப்பிலை கொத்துக்களை தோரணங்களாக கட்டி உள்ளனர்.
கண்டாச்சிமங்கலம்:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனால் கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக கிராம மக்கள் அனைத்து தெருக்களிலும் குறுக்கே வேப்பிலை கொத்துக்களை தோரணங்களாக கட்டி உள்ளனர். சிலர் தங்களது வீட்டு வாசலின் முன்பும் வேப்பிலை கொத்துகளை கட்டி உள்ளனர். இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில் எங்களது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இந்த அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் வேப்பிலை கொத்துகளை தெருக்களின் குறுக்கே தோரணங்களாக கட்டியுள்ளனர். பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் கிராமத்தில் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? என்பதை சுகாதாரத்துறையினர் கண்காணித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Tags:    

Similar News