செய்திகள்
சபரிமலை பிரசாதம்

சபரிமலை பக்தர்களுக்கு தபாலில் பிரசாதம் வழங்க தேவசம் போர்டு ஏற்பாடு

Published On 2020-10-26 07:45 GMT   |   Update On 2020-10-26 11:31 GMT
சபரிமலை கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தின் பிரசாதங்களை பக்தர்களுக்கு தபால் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு விழாக்களின்போது ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டு கொரோனா பிரச்சினையால் சபரிமலையில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜை களில் பக்தர்கள் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தினமும் 5 ஆயிரம் பக்தர்களே வரவேண்டும், அவர்களும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு வர முடியாத பக்தர்களுக்கு கோவில் பிரசாதம் உள்ளிட்டவற்றை அளிக்க சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சிறப்பு திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.

அதன்படி, தபால் துறையுடன் இணைந்து சபரிமலை கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தின் பிரசாதங்களை பக்தர்களுக்கு தபால் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.

இதன் மூலம் பக்தர்கள் வீட்டில் இருந்தே சபரிமலை பிரசாதத்தை பெற முடியும். இந்தியாவில் உள்ள பக்தர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகம் மூலம் சபரிமலை பிரசாதம் வழங்கக்கேட்டு முன்பதிவு செய்யலாம்.

பணம் செலுத்திய 2 அல்லது 3 நாட்களுக்குள் பிரசாதம் தபால் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அரவணை, நெய், விபூதி, மஞ்சள் மற்றும் குங்குமம் அடங்கிய பிரசாதங்கள் பையில் வைத்து பார்சலில் அனுப்பி வைக்க தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.


Tags:    

Similar News