செய்திகள்
பண்ணைபுரத்தில் உள்ள கார்த்திக் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது எடுத்தபடம்

தேனி மாவட்டத்தில் மாவோயிஸ்டு வீடு உள்பட 2 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை

Published On 2021-10-13 14:04 GMT   |   Update On 2021-10-13 14:04 GMT
தேனி மாவட்டத்தில் மாவோயிஸ்டு வீடு உள்பட 2 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தேனி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மாவோயிஸ்டாக செயல்பட்டு வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு பெரியகுளம் அருகே முருகமலை வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட முயன்ற வேல்முருகன் மற்றும் மாவோயிஸ்டுகள் முத்துச்செல்வம், பழனிவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பேர் தப்பி ஓடினர். அதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் மாவோயிஸ்டு நவீன்பிரசாத் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பின்னர் வேல்முருகன் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மாவோயிஸ்டு இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்தார். இதற்கிடையே கடந்த ஆண்டு கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் வேல்முருகன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய உடல் பலத்த பாதுகாப்புடன் பெரியகுளம் நகராட்சி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் மாவோயிஸ்டு வேல்முருகன் வீட்டுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று திடீரென்று வந்தனர். அப்போது வேல்முருகனின் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஏதேனும் பொருட்கள், ஆவணங்கள் உள்ளதா? என தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் அந்த வீட்டில் இருந்த வேல்முருகனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஓராண்டு கால கட்டத்தில் வெளியூர்களில் இருந்து யாரெல்லாம் அவருடைய வீட்டுக்கு வந்து சென்றனர் என்று விசாரணை நடத்தினர்.

இதேபோல், உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரத்தை சேர்ந்த கார்த்திக் (37) என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கார்த்திக் அங்கு இல்லை. அவருடைய குடும்பத்தினர் மட்டும் இருந்தனர். அவர்களிடம் கார்த்திக் வசிக்கும் இடம் குறித்து கேட்டறிந்தனர். ஆனால் சில மாதங்களாகவே அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவருடைய வீட்டில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கார்த்திக், சமூக வலைத்தளங்களில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த 2 இடங்களிலும் நேற்று காலை தொடங்கி மதியம் வரை சோதனை நடந்தது. சோதனையில் யாரும் கைது செய்யப்படவில்லை. 2 வீடுகளில் இருந்தும் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்.ஐ.ஏ. அதிகாரிகளின் இந்த திடீர் சோதனை, அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News