செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

அமராவதி ஆற்றில் எத்தனை நிறுவனங்களின் கழிவுநீர் கலக்கிறது?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

Published On 2020-12-03 03:50 GMT   |   Update On 2020-12-03 03:50 GMT
அமராவதி ஆற்றில் எத்தனை நிறுவனங்களின் கழிவுநீர் கலக்கிறது என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
மதுரை:

மதுரை ஐகோர்ட்டு பதிவாளர்(நீதித்துறை), மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் மாவட்டத்தில் சாய பட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் அமராவதி ஆறு மாசடைகிறது. அதுமட்டுமல்லாமல் கரூரில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களால் இந்த ஆறு அழிக்கப்பட்டு வருகிறது. அமராவதி ஆறு சுமார் 282 கிலோமீட்டர் தூரம் திருப்பூர், கரூர் வழியாக செல்கிறது.

இந்த மாவட்டங்களில் உள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவன கழிவுகளை ஆற்றுக்குள் வீசுகின்றனர். இதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. தமிழகத்தின் அடுத்த கூவமாக இந்த ஆறு மாறிவிடுமோ என்று விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கவலைப்படுகின்றனர்.

எனவே சாய கழிவுநீரை அமராவதி ஆற்றில் கலப்பதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆற்றை மாசுபடுத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து, அவர்களை ஏன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் கரூர் மாவட்டத்தில் எத்தனை சாய பட்டறைகள் உள்ளன? எத்தனை நிறுவனத்தின் சாய கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது? சாய கழிவுநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் உள்ளதா? ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எவ்வளவு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது? இந்த நிறுவனங்களில் இருந்து எவ்வளவு சாய கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது? என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், கரூர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் மாவட்ட சட்ட உதவி மைய நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News