செய்திகள்
மு.க.ஸ்டாலின்

மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது- மு.க.ஸ்டாலின் பேட்டி

Published On 2021-04-06 05:15 GMT   |   Update On 2021-04-06 05:15 GMT
ஆளுங்கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்ட காரணத்தால் எப்படியாவது தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சென்னை:

தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குசாவடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது ஜனநாயக கடமையை நாங்கள் ஆற்றி இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் அமைதியாக மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக எனக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆகவே ஜனநாயக கடமையை மக்கள் ஆற்றி கொண்டிருக்கிறார்கள். இதனுடைய முடிவு மே 2-ந் தேதி சிறப்பாக இருக்கும். அது உறுதி.

கேள்வி: மக்கள் ஆர்வமாக எழுச்சியுடன் வாக்களித்து வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பதை பார்க்கும்போது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் இருப்பதை நான் தெளிவாக உணர்கிறேன்.

கேள்வி: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை எப்படி உள்ளது? திருப்தியாக இருப்பதாக நினைக்கிறீர்களா?

பதில்: திருப்தி என்றும் சொல்ல முடியாது. அதிருப்தி என்றும் கூறமுடியாது.

கேள்வி: தமிழ்நாடு முழுவதும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள் என நினைக்கிறீர்கள்?

பதில்: என்னைவிட ஊடகத் துறைக்குத்தான் அதிகமாக தெரியும். நீங்களே சொன்னால் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.

கேள்வி: தி.மு.க.வினர் போட்டியிடும் முக்கிய தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என ஆளும்கட்சியினர் புகார் செய்திருந்தார்களே இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: அது ஆளும்கட்சியின் ஒரு தூண்டுதல். தோல்வி பயம் வந்துவிட்ட காரணத்தால் எப்படியாவது தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை.

கேள்வி: இந்த தேர்தலில் ஆளும் கட்சியினர் பணப் பட்டுவாடா செய்ததாகவும் புகார் வந்ததே?

பதில்: தேர்தல் ஆணையம் தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News