உள்ளூர் செய்திகள்
மண்பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்.

போடியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானைகள் விற்பனை

Published On 2022-01-12 08:17 GMT   |   Update On 2022-01-12 08:17 GMT
போடியில் பொங்கல் பண்டிகைக்காக அதிக அளவில் மண் பானைகள் மற்றும் அடுப்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஊரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது குலாளர் பாளையம்.இப்பகுதி மக்கள் அனைவரும் பல தலைமுறைகளாக மண் பாண்டம் செய்வதையே தங்கள் குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின் றனர். முந்தைய காலங்களில் மக்கள் அனைவரும் மண்பாண்டங்களிலேயே அனைத்து வகை சமையல் செய்து வாழ்ந்து வந்த காலங்களில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

 தற்போது மக்களின் மனதில் நாகரீக வளர்ச்சி காரணமாகவும் கேஸ் அடுப்பு, மின்சார அடுப்பு போன்றவைகளில் குக்கர் மற்றும் உலோகப் பாத்திரங்களில் மக்கள் சமையல் செய்யும் மனநிலைக்கு மாறி விட்ட பின்னர் பண்பாட்டு தொழில் நலிவடைய தொடங்கியது. இதனால் இம்மக்களில் பெரும்பாலானவர்கள்  தாங்கள் குலத்  தொழிலை விடுத்து பிற தொழில்களுக்கு மாறிச் சென்று விட்டனர்.

 தற்போது போடியில் சுமார் 20 குடும்பங்கள் மட்டுமே தாங்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வரும் மண் பாண்ட தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். சுற்றுப்பகுதியில் உள்ள கோயில்களில் குறிப்பாக வீரபாண்டியில் நடைபெறும் தீச்சட்டி திருவிழாவிற்கு தீச்சட்டி எடுப்பதற்கான மண் சட்டிகள் பெரும் பாலும் போடியில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன.  கடந்த 2 வருடங்களாக கொரோனா முதல் மற்றும் 2வது அலை காரணமாக திருவிழாக்கள் அனைத்தும் தடைபட்டதால் தீச்சட்டி எடுப்பது இல்லாமல் போனது.இதனால் மண்பாண்டம் செய்வோரின் வாழ்வு மிகவும் முடங்கிப் போனது.

 மேலும் மண் தட்டுப்பாடு காரணமாகவும், மணல் எடுப்பதற்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள மண் பற்றாக்குறை இவர்களது தொழில் வளர்ச்சியை மிகவும் முடக்கி போட்டுள்ளது. தற்போது தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் உரிய சான்றுகளுடன் இவர்கள் மண் எடுக்க அனுமதித் துள்ளனர். இச்சூழலில் தங்கள் குலத் தொழிலை விடாத இவர்கள் வாழ்வாதார போராட்டத்துடன் மண் பாண்ட தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

 ஒரு காலத்தில் பொங்கல் என்றால் மண் பானை மற்றும் மண் அடுப்புகள்  விற்பனை களைகட்டும்.  மண் பாண்டங்கள்   செய்யும் குயவர்கள் ஆயிரக்கணக்கில் பொங்கல் திருவிழாவிற்காக  மண்பானை செய்து  விற்பனை செய்து வருவார்கள். இக்காலத்தில் தமிழகமெங்கும் மண்பானை வியாபாரம் களைகட்டும். ஆனால் தற்போது நாகரீகம் வளர்ந்து விட்டதால் மண்பாண்டங்களை பயன்படுத்துவதை மக்கள்  தவிர்த்து வருகின்றனர்.
 
மண்பானையில் செய்த சமையலை சாப்பிட்டால் சர்க்கரை உள்ளிட்ட பிற உயிர்க்கொல்லி நோய்கள் மனிதனை அண்டாது. அதனால்தான் நம் முன்னோர்கள் மண்பானை யில் செய்த சமையலை சாப்பிட்டு 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்போதைய மக்கள் மண்பாண்ட சமையலின் உணவை தவிர்ப்பதால் பலவேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்
Tags:    

Similar News