செய்திகள்
பொல்லார்டு

கடைசி ஐந்து ஓவரில் 77 ரன்: இந்தியாவுக்கு 316 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2019-12-22 12:02 GMT   |   Update On 2019-12-22 12:02 GMT
நிக்கோலஸ் பூரன், பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவுக்கு 316 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தீபக் சாஹருக்குப் பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார்.

எவின் லீவிஸ் - ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 15 ஓவரில் 57 ரன்னாக இருக்கும்போது லீவிஸ் 21 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஷாய் ஹோப் உடன் ராஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். ஷாய் ஹோப் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் 33 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சேஸ் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அப்போது வெஸ்ட் இண்டீஸ் 31.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு நிக்கோலஸ் பூரன் உடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

குறிப்பாக பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 45 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஐந்து ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ரன்கள் குவித்தது. நவ்தீப் சைனி வீசிய 46-வது ஓவரில் பூரன் 3 பவுண்டரி விளாசினார். ஷமி வீசிய 47-வது ஓவரில் பொல்லார்டு சிக்ஸ் ஒன்று விளாசினார்.

சர்துல் தாகூர் வீசிய 48-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஆனால் ஐந்தாவது பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பூரன் 64 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்கள் சேர்த்தார்.

பூரன் - பொல்லார்டு ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஹோல்டர் களம் இறங்கினார். 6-வது பந்தை அவர் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 21 ரன்களை விளாசியது.



நவ்தீப் சைனி வீசிய 49-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி 44 பந்தில் அரைசதம் அடித்தார் பொல்லார்டு. 5-வது பந்தை சிக்சருக்கு துரத்தினார். வெஸ்ட் இண்டீஸ்க்கு இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது.

கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் 2-வது மற்றும் 3-வது பந்தை சிக்சருக்கு துரத்தினார் பொல்லார்டு. இந்த ஓவரில் 16 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது.

பொல்லார்டு 51 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா கடைசி 5 ஓவர்களில் 77 ரன்கள் விட்டுக்கொடுத்தது.
Tags:    

Similar News