செய்திகள்
விமானம்

சென்னையில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் சிறுமிக்கு திடீர் மூச்சு திணறல்

Published On 2019-08-03 06:10 GMT   |   Update On 2019-08-03 06:10 GMT
சென்னையில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் சிறுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

சென்னை:

சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு கேப்வே பசிபிக் விமானம் நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அந்த விமானம் நேற்று தாமதமாக வந்ததால் அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு சென்றது.

அதில் 234 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்க தொடங்கியது. அந்த விமானத்தில் பயணம் செய்த சங்கர் (42), மித்ரா தம்பதியின் மகள் சஹானா (7)விற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறுமி மூச்சுவிட முடியாமல் திணறினாள்.

இதனால் அவளது பெற்றோர் கதறி அழுதார்கள். உடனே விமான பணிப் பெண் ஓடி வந்து பார்த்து நிலைமையை விமானிக்கு தெரிவித்தார்.

சிறுமியின் உடல் நிலை குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து அவசரமாக விமானத்தை தரை இறக்க விமானி அனுமதி கேட்டார். அந்த விமானத்தை மீண்டும் சென்னையில் தரை இறக்க அனுமதி கொடுக்கப்பட்டதையடுத்து விமானம் தரை இறங்கியது.

இதற்கிடையில் விமான நிலையத்தில் மருத்துவ குழு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டனர். காலை 6.25 மணிக்கு விமானம் தரை இறங்கியதும் மருத்துவ குழுவினர் விமானத்திற்குள் சென்று சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து கீழே இறக்கினார்கள்.

சிறுமியின் உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதை அடுத்து 3 பேரின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவ மனையில் சிறுமி சேர்க்கப்பட்டாள்.

இதையடுத்து 3 பேரின் உடமைகளும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு மீண்டும் 8.20 மணிக்கு விமானம் ஹாங்காங் புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் விமானம் தரை இறக்கப்பட்டதால் சிறுமி உயிர் பிழைத்தாள்.

Tags:    

Similar News