ஆன்மிகம்
முருகன், வள்ளி-தெய்வானைக்கு ஆறாட்டு நடந்ததையும், அதை காண திரண்டிருந்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.

முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் முருகன், வள்ளி- தெய்வானைக்கு தெப்பக்குளத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி

Published On 2021-01-29 06:16 GMT   |   Update On 2021-01-29 06:16 GMT
கன்னியாகுமரி வேல்முருகன் கோவிலில் முருகன், வள்ளி-தெய்வானைக்கு தெப்பக்குளத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நேற்று வரை 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது.

விழாவையொட்டி தினமும் அதிகாலையில் நிர்மால்ய தரிசனமும் தொடர்ந்து அபிஷேகமும், சிறப்பு வழிபாடும், யாகசாலை பூஜையும் நடந்தது. உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும் நடந்தது. மாலையில் சமய உரையும், இரவு பஜனையும் நடந்தது.

பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

10-ம் திருநாளான நேற்று தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி கிரிவலம் வருதலும், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை திருக்குளத்தில் வேல்முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு தீர்த்தவாரி ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சுவாமிக்கும், அம்பாள் விக்ரகங்களுக்கும் பொய்கை திருக்குளத்தின் கரையில் வைத்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் விக்ரகங்களுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

அதன்பிறகு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து முருகன் குன்றத்தின் மேல் பகுதியில் கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் நற்பணி மன்றத்தினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News