செய்திகள்
ஏ.சி.சண்முகம்

நான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்

Published On 2019-08-17 04:58 GMT   |   Update On 2019-08-17 04:58 GMT
மத்திய அரசு, பா.ஜனதா குறித்து தான் கூறாத கருத்து வெளியாகி உள்ளதாக ஏ.சி.சண்முகம் தெரிவித்து உள்ளார்.
சென்னை:

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் 8 ஆயிரத்து 141 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றால் தான் தோற்றதாக ஏ.சி.சண்முகம் கருத்து தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மத்திய அரசு, பா.ஜனதா குறித்து தான் கூறாத கருத்து வெளியாகி உள்ளதாக ஏ.சி.சண்முகம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் நான் முத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து நீக்கம் ஆகியவற்றால்தான் தோல்வியுற்றேன் என்று நான் சொல்லாத கருத்துக்களை வெளியிட்டு இருப்பது மிகவும் தவறான செயலாகும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடைச் சட்டம், இஸ்லாமிய பெண்களின் வாழ்வின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டமாகும்.

அதே போல் காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்கம் சட்டத்தை ஒருசிலர் மட்டுமே எதிராகவும், மற்றவர்களை தூண்டி விடும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். இந்த சட்டப்பிரிவினை நீக்கியதன் மூலம் காஷ்மீரில் தொழில் வளர்ச்சி பெருகும்.

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் உண்மையான வெற்றி அ.தி.மு.க.வுக்கே கிடைத்துள்ளது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தலில் மக்களை ஏமாற்ற முடியவில்லை.

ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் வீடு, வீடாக திண்ணைப் பிரசாரம் செய்தும், கண்ணீர் விட்டு கபட நாடகம் நடத்தியபோதும் மக்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே தி.மு.க. தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றுள்ளது. 47 சதவீதம் வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கடந்த தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் 29 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்ற அ.தி.மு.க. இப்போது 11 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளன. ஆம்பூரில் 39 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்ற தி.மு.க. தற்போது 30 ஆயிரம் வாக்குகளை இழந்துள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் மக்கள் தி.மு.க.வை புறக்கணித்துள்ளதையே இது காட்டுகிறது.

திராவிட பாரம்பரியத்தில் வந்த மூத்த தலைவரான துரைமுருகன் கிராம் கிராமமாக சென்று சொந்தம், உறவுகள் என்று மக்களிடம் பேசி ஜாதி வாக்குகளை கூடுதலாக பெற்றதன் விளைவாகவே தி.மு.க. இந்த சொற்ப வெற்றியைப் பெற்றுள்ளது.

வரும் காலங்களில் தவறான மனிதர்கள் அளித்த தவறான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளதை மக்கள் கண்டிப்பாக உணருவார்கள். வேலூர் தொகுதி மக்கள் எனக்கு கணிசமான வாக்குகளை அளித்துள்ளனர். வெற்றி வாய்ப்பு நழுவிய போதிலும் எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

இவ்வாறு ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
Tags:    

Similar News