ஆன்மிகம்
கோபியர் கொஞ்சும் கண்ணன்

கோபியர் கொஞ்சும் கண்ணன்

Published On 2019-09-05 08:52 GMT   |   Update On 2019-09-05 08:52 GMT
கோகுலத்து பெண்களின் பிரேமை மயக்கம் என்பது ஒரு வித்தியாசமான பக்தி. அதற்குக் காரணம் கோபியர் கண்ணனிடம் காட்டிய பிரேமை அலாதியானது. அற்புதமானது, ஆனந்தமயமானது.
கண்ணனின் புன்சிரிப்பு இனிமைமிக்கது. புன்சிரிப்பென்ற அமுதத்தால் அழகு பெற்ற தாமரை முகக்கொழுத்த மயில் இறகால் அலங்கரிக்கப்பட்ட திருமுகமனதிற்கினியதாயிருக்கும் விசாலமான கண்களையுடையது.

கிருஷ்ணனின் கண் தாமரை மொட்டு போன்றது, அவனுடைய கன்னப்பிரதேசம் கண் ணாடி போல் வழவழப்பும் மென்மையும் உடை யது. அவனுடைய முகம் தாமரை போன்றது, வேணுகானமாகிற தேன் நிரம்பியது.

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குழந்தை வடிவம் கொண்டவன், அழகிய திரு மேனியையுடையவன், அவனுடைய குழலோசை இனியது, அந்த ஓசையால் பூரிப்படைந்த சந்திரனைப் போன்ற முகம் அவனுடையது.

கண்ணனின் முகம் லட்சுமி தேவியின் கையில் விளையாட்டாக இருந்து கொண்டிருக்கும் தாமரை போன்ற முகம். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருப்பவன், ரகசியமான பாவனைகளைப் புல்லாங்குழலின் துவாரங்களில் நுழைத்து வாசிப்பவன், ஊஞ்சலின் ஆட்டம் போன்ற பார்வையை உடையவன், கண்களுக்கு இனியவன்.

அவனது சிரிப்பு வெட்கத்துடன் கூடியது போலும், அதுஅழகானது, தேனால் நனைக்கப்பட்டது போன்ற கீழுதடு, அது காந்தியால் பிரகாசிப்பது. பூர்ண சந்திரனே கொண்டாடுகிற (சந்திர) முகத்தையுடையவன்.

சூரியனுடைய கிரகணங்கள் பனியை விரட்டியடிப்பவை இக்கிரகணங்களால் மெதுவாகத் தொடப்பட்டது. அழகுடன் கூடியது, மிக்க மகிழ்ச்சி தருவது, அப்படிப்பட்ட புஷ்பத்துக்கு சமமான கண்கள் கிருஷ்ணனுடையவை, கோகுலப் பெண்களுடன் விளையாட்டாகச் சண்டை போட்டான். ஜெயித்தவன் அவனே, இந்த லீலையால் கர்வமடைந்து மகிழ்கிற சந்திரனைப் போன்ற முகத்தையுடையவன்.

கண்ணனுடைய புல்லாங்குழலின் நாதம், அவனுடைய கை விரல்களால் அது மீட்டப்படுகிறது. அந்த விரல் தாமரையின் இதழ் போன்றவை. அந்த இனிமையான நாதத்தில் பெருகுகிற அமுதம் நிறைந்த தடாகம் போன்றவன் அவன். அவனுடைய புன்முறுவல் இயற்கையான ஆனந்த ரசம் நிரம்பியது. அந்த ரசத்தை எப்போதும் தாங்குகிற கீழுதடு ரத்னம் போன்றது.

தன்னைத் தானாகவே கோகுலத்தில் பிறப்பை எடுத்துக் கொண்டவன், ஆனால் சர்வ வியாபகனான பகவான் அவன், அதிசயமான வேஷதாரியானவன், சம்கார பயத்திற்கு ஒரே மருந்தானவன்.

காதுகளில் தொங்கட்டான், பூக்கொத்தினுடைய இதழ்கள் அவனுடைய கன்னப் பிரதேசத்தை சிவப்பாகச் செய்கின்றன. பரிசுத்தமானவன். வேத வாக்கியங்களுக்கும் எட்டாதவன்.

கண்ணனின் கண்கள் நீலோத்பலம் போன்றவை. அவனுடைய உதடுகள் இரு பாதியாக பிரிக்கப்பட்ட அரும்பு போன்றவை. அவனுடைய கைவிரல் நுனிகள் வேகமாகப் புல்லாங்குழலின் மேல் அசையும், அக்குழலின் இனிமையை அவன் அனுபவிக்கிறான்.

ஸத்த-சித்து-ஆனந்தம் ஆகியவையே ரூபமாக உடையவன், எல்லா மாயையையும் ஒழித்தவன், சத்தியமென்ற தனத்துக்கு சகாயமாயிருப்பவன், மனத்திடனடக்கமும், புலன்களின் அடக்கமும் சாந்தமும் கூடுமிடம், எல்லா விக்கனங்களும் நீங்கிய இடம், நல்ல இதயம் படைத்த ஜனங்களின் ஆஸ்தியானவன்.

சிரசில் மயிலிறகு, நெற்றித் தலத்தில் கஸ்தூரி- திலகம், இரு காதுகளிலும் பச்சிலைகள், மூக்கில் முத்து, கழுத்தில் தொங்கும் முத்து மாலை, மந்தாரப்பூ மாலையின் வாசனையுடன் விளங்குவது. மஞ்சள் பட்டாடையுடனும் புல்லாங்குழலுடனும் உள்ள கண்ணனை கோகுலப் பெண்கள் சூழ்ந்திருக்கின்றனர்.

நாராயணனுக்கு ஆழ்வார்கள் - ஸ்ரீராமருக்கு வானரங்கள் - சிவபெருமானுக்கு நாயன்மார்கள் என்பது போல் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு கோகுலத்து பெண்கள் அடியார்களைப் போல் அபரிதமான பக்தி கொண்டிருந்தனர்.

கண்ணன் மீது நீங்காத பக்தி பூண்ட கோபியர்கள் பூவுலகில் பெரும் புண்ணியத்தைச் செய்து பிறந்தவர்கள். கண்ணனின் மோகக் குழலோசைக்கு அந்த மோகனப் பதுமைகள் மதி மயங்கிப் போயினர்.

கோகுலத்து பெண்களின் பிரேமை மயக்கம் என்பது ஒரு வித்தியாசமான பக்தி. அதற்குக் காரணம் கோபியர் கண்ணனிடம் காட்டிய பிரேமை அலாதியானது. அற்புதமானது, ஆனந்தமயமானது.

பக்தர்களால் பகவானைத் தரிசிக்காமல் இருக்க முடியாது. அதே போல் கோபியர்களால் ஒரு கணம் கூட கிருஷ்ணனைப் பிரிந்து இருக்க முடியாது.
ஸ்ரீகிருஷ்ணன் மதுராபுரிக்குச் சென்றதும், அவனது பிரிவை கோபியர்களால் தாங்க முடியவில்லை. கண்ணனிடம் பூண்டுள்ள பிரேமையை அவர்களால் மறக்க முடியவில்லை.

கோபியர், கண்ணனின் திருமேனியைத் தரிசித்து மகிழ்ந்த பக்திப் பாவையர்கள். அவர்கள் நிலையான பேரின் பத்தைக் கண்டவர்கள். சிற்றின்பத்தைக் காணாதவர்கள். கோபியர், தாங்கள் ஸ்ரீகிருஷ்ணனிடம் கொண்டுள்ள அபரிதமான தாபத்தினால் உல கையே மறந்து விடுகிறார்கள். ஸ்ரீகிருஷ்ணன் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் ஆனதால் கோபியர்களின் பிரேமையும் நிர்குணசொரூப மடைந்து ஜென்ம சாபல்யம் அடைகிறது.
கோபியர் வேத சாஸ்திர இதிகாசங்களைக் கற்றுத் தெளிந்தவர்கள் அல்லர். ஆனால் கிருஷ்ணனிடம் பூண்டுள்ள பிரேமை எனும் பக்தியால் பேரானந்த பெருநிலையை அடைந்துவிட்ட தவமணிகள்.

அல்லும் பகலும் பக்தனைப் போல் பரந்தாமனிடம் பக்தி பூண்ட கோபியர் எங்கும் - எதிலும்- எப்போதும் ஸ்ரீகிருஷ்ணனுடைய மோகனரூபத்தைக் கண்டு களித்துப் பெருமிதம் பூண்டவர்கள். அதனால்தான் இன்றும் ஹரிகதா காலசேபங்கள் பூர்த்தி பண்ணும் போது, “கோபிகா ஜீவன ஸ்மரணம்” என்று கூறப்படுகிறது.
கோபியர்களைப் போல் பக்திக்கு நிகரானவர்கள் எவருமே கிடையாது.
Tags:    

Similar News