செய்திகள்
வைகை அணை

கனமழையால் 66 அடியை கடந்த வைகை அணை நீர்மட்டம்

Published On 2021-07-09 05:07 GMT   |   Update On 2021-07-09 05:07 GMT
நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் வைகை அணை நீர்மட்டம் 66 அடியை கடந்த நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர்மழை பெய்ததால் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டது.

71 அடி உயரம் உள்ள வைகை அணையில் 68 அடி நீர்மட்டம் எட்டியவுடன் முதல் வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். நேற்று 66 அடியை எட்டிய நிலையில் இன்று 66.34 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1877 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு 700 கனஅடியும், மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடியும் என மொத்தம் 769 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4931 மி.கனஅடியாக உள்ளது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். ஆற்றில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டாவோ கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. வரத்து 492 கனஅடி, திறப்பு 1711 கனஅடி, இருப்பு 3834 மி.கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.34 அடி, வரத்து 4 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

வீரபாண்டி 28, வைகை அணை 48.8, மஞ்சளாறு 5, சோத்துப்பாறை 25, கொடைக்கானல் 5.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News