ஆன்மிகம்
கொடிமரத்தின் அடிப்பகுதி சேதமடைந்துள்ளதையும், கொடிமரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததையும் காணலாம்

தஞ்சை பெரியகோவிலில் இருந்த 33 அடி உயர கொடிமரம் அகற்றம்

Published On 2020-01-13 03:44 GMT   |   Update On 2020-01-13 03:44 GMT
தஞ்சை பெரியகோவிலில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட 33 அடி உயர கொடிமரம் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக புதிய கொடிமரம் நட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், நந்தி பெருமான் ஆகிய சன்னதிகளுக்கு முன்பு கொடிமரம் அமைந்துள்ளது. இந்த கொடிமரம் தேக்கு மரத்தால் ஆனது. இந்த கொடிமரத்தை சுற்றிலும் உலோகம் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கொடிமரத்தில் சுற்றி இருந்த உலோகம் கழற்றப்பட்டு பாலீஷ் போடப்படுகிறது.

இந்த கொடிமரத்தின் பீடம் மட்டும் 5 அடி உயரம் கொண்டது. அதற்கு மேல் 28 அடி உயரத்தில் கொடிமரம் காணப்பட்டது. மொத்தம் கொடிமரம் 33 அடி உயரம் கொண்டதாக இருந்தது.

இந்த கொடிமரத்தின் அடிப்பகுதியில் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து புதிதாக கொடிமரம் வாங்கி நடப்பட உள்ளது. இதற்காக மயிலாடுதுறை, சென்னை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஏதாவது ஒரு பகுதிகளில் கொடிமரம் வாங்குவது தொடர்பாக அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று சேதமடைந்த கொடிமரத்தை அகற்றும் பணி நடந்தது. இதற்காக கொடிமரத்தை சுற்றிலும் இரும்பினால் ஆன சாரம் அமைக்கப்பட்டு சங்கிலி உதவியுடன் கொடிமரத்தை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்காக கொடிமரத்தை சுற்றிலும் கான்கிரீட் போடப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டு இருந்ததை அகற்றி அதன் பின்னர் கொடிமரம் அகற்றப்பட்டது.

உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் முன்னிலையில் இந்த கொடிமரம் அகற்றும் பணி நடந்தது. இந்த நிலையில் கோபுர கலசங்களில் போடுவதற்காக தானியம் வாங்கி காயவைக்கும் பணியும் பெரிய கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது.
Tags:    

Similar News