வழிபாடு
திருக்கோஷ்டியூர் சவுமிய நராராயணப்பெருமாள் கோவில்

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் இன்று இரவு சொர்க்க வாசல் திறப்பு

Published On 2022-01-13 04:11 GMT   |   Update On 2022-01-13 04:11 GMT
திருக்கோஷ்டியூர் சவுமிய நராராயணப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று இரவு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா பகல்பந்து உற்சவத்துடன் தொடங்கியது. அன்று ஆண்டாள் சன்னதி முன்பு பெருமாள் எழுந்தருளினார். காப்பு கட்டப்பட்டு பகல் பத்து உற்சவம் தொடங்கியது.

இதை தொடர்ந்து காலையில் பெருமாள் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளி, ஆழ்வார்களுக்கு மரியாதையும், மங்களசாசனமும் நடந்தது.

10-ம் திருநாளன்று மோகினி அவதாரத்தில் பெருமாள் தென்னைமர வீதி புறப்பாடு நடைபெற்றது. நேற்றுடன் பகல் பத்து நிறைவடைந்தது.

இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சயனத்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சித்தருவார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். பின்னர் இரவு 6 மணிக்கு பெருமாள் ராஜாங்க அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

வழக்கமாக இந்த கோவிலில் இரவு 11 மணிக்கு மேல் தான் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் இன்று இரவு 8 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

சொர்க்க வாசல் வழியாக பெருமாள் வந்து நம்மாழ்வார்க்கும், பக்தர்களுக்கும் அருள்பாலிப்பார். தொடர்ந்து ஏகாதசி மண்டபம் சென்று பக்தி உலாத்துதல் நடைபெறும். பின்னர் மங்களாசாசனம் முடிந்து தென்னைமரத்து வீதி புறப்பாடு நடைபெற்று கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளுவார். தொடர்ந்து அம்பாள் சன்னதியில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமி தேவியாருடன் எழுந்தருளி காப்புக்கட்டப்பட்டு இரவுப்பத்து உற்சவம் தொடங்கும்.

இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News