செய்திகள்
கோப்புபடம்.

குண்டடம் அருகே பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்-இரவு பகலாக கண்காணிக்கும் விவசாயிகள்

Published On 2021-11-21 10:03 GMT   |   Update On 2021-11-21 10:03 GMT
மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் வயல்களில் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குண்டடம்:

குண்டடம் அருகே உப்பாறு அணையை ஒட்டிய பகுதிகளான கள்ளிவலசு, ஒட்டபாளையம், பெல்லம்பட்டி மருதூர்மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. 

இந்தப் பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்து கதிர்விடும் நிலையில் உள்ளது. 

இந்த நிலையில் உப்பாறுஅணையின் நீர்த்தேக்கப் பகுதிகளான ஒட்டபாளையம், பெல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டுப் பன்றிகள் படையெடுக்கின்றன. 

அவ்வாறு வரும் காட்டுப் பன்றிகள் மக்காச்சோள பயிர்களை கடித்தும், மிதித்தும் சேதப்படுத்துகின்றன. இதனால் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் வயல்களில் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒட்டபாளையத்தைச் சேர்ந்த மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் வசித்து வந்த காட்டுப் பன்றிகள் விவசாய வயல்களை நோக்கி வரத்தொடங்கியுள்ளன.

தற்போது 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள வயல்களில் புகுந்து பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. 

ஆகவே வேறு வழியின்றி இரவு நேரங்களில் வயல்களில் காவல் காத்து வருகிறோம். எனவே காட்டுப் பன்றிகளை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News