செய்திகள்
தீ விபத்து

வேலூரில் தீபாவளிக்கு பலகாரம் செய்தபோது கியாஸ் கசிந்து தீ விபத்து

Published On 2020-11-16 12:18 GMT   |   Update On 2020-11-16 12:18 GMT
வேலூரில் தீபாவளிக்கு பலகாரம் செய்தபோது சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு 2 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குடிசை வீடு ஒன்று எரிந்து நாசமானது.
வேலூர்:

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூர் முத்துமண்டபம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ‘பி’ பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் உடனடியாக வேலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். அதற்குள் அவர்கள் துணிப்பையை தண்ணீரில் நனைத்து சிலிண்டர் மீது போட்டு தீயை அணைத்தனர். அதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த குடும்பத்தினரிடம் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்தினர்.

இதேபோன்று வேலூர் சத்துவாச்சாரி மலையடிவாரத்தில் உள்ள குடிசை வீட்டில் நேற்று முன்தினம் பலகாரம் செய்தனர். அப்போது சமையல் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை.

இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் குடிசை எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த கட்டில், பணம், துணிமணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமானது. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News