செய்திகள்
குளச்சல் ஏலக்கூடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெத்திலி மீன்களை படத்தில் காணலாம்.

குளச்சல் கடலில் நெத்திலி மீன்கள் ஏராளமாக சிக்கின - விலை சரிவால் மீனவர்கள் கவலை

Published On 2021-07-07 14:11 GMT   |   Update On 2021-07-07 14:11 GMT
குளச்சலில் நெத்திலி மீன்கள் ஏராளமாக சிக்கின. விலையில் கடும் சரிவு ஏற்பட்டதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
குளச்சல்:

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கு தடை காலம் அமலில் இருந்து வருகிறது.

இதனால் கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்கள் மட்டுமே தொழில் செய்து வருகின்றன. கடந்த 2 வாரங்களாக குளச்சல் கடல் பகுதியில் நெத்திலி, சாளை மீன்களே கிடைத்து வருகிறது.

நேற்று குளச்சல் மீனவர்களின் கட்டுமரங்களில் ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் துறைமுக ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். சில நாட்களுக்கு முன் ஒரு கூடை நெத்திலி மீன்கள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால் நேற்று நெத்திலி மீன்கள் விலை கடுமையாக சரிந்து ரூ.800 மற்றும் அதற்கு கீழே தான் போனது. இதனால் மீன் பிடித்து வந்த மீனவர்கள் எதிர் பார்த்த விலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

அதே சமயம் நெத்திலி மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர். விலை சரிவு காரணமாக சில மீனவர்கள் நெத்திலி மீன்களை கருவாட்டிற்காக கடற்கரை மணற்பரப்பு, பாலம், துறைமுக வளாகம் ஆகிய பகுதிகளில் உலர போட்டு இருந்தனர்.

கோடிமுனை, வாணியக்குடி கிராமங்களிலும் நெத்திலி மீன்கள் அதிகம் கிடைத்தன. அதை கருவாடு வியாபாரிகள் மட்டுமல்லாமல், வெளிமாவட்ட மீன் எண்ணை ஆலையினரும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
Tags:    

Similar News