செய்திகள்
மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் வாசிகள்

விபத்துக்குள்ளான கேரள விமானத்தில் பயணித்தவர்களுக்கு கொரோனா - மீட்பு பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தல்

Published On 2020-08-10 14:10 GMT   |   Update On 2020-08-10 14:10 GMT
கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரம்: 
 
வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.

விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இதற்கிடையில், விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்சுகள் வர தாமதமானதால் விமான விபத்தில் காயமடைந்தவர்களை அப்பகுதியை சேர்ந்த மக்களே மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், விமானத்தில் சிக்கியவர்களை மீட்ட மக்கள் காயமடைந்தவர்களை தங்கள் சொந்த வாகனங்களில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கேரள மக்களின் இந்த செயல் நாடு முழுவதும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், விமான விபத்தில் உயிரிழந்த ஒரு பயணிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் உயிரிழந்த பயணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1 நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான விபத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மலப்புரம் மாவட்ட கலெக்டர்
கேபாலகிருஷ்ணனும் உள்ளடக்கம்.

இதையடுத்து, விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள், பாதுகாப்பு படையினர், அதிகாரிகள் உள்பட 600 பேர் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டனர்.

பயணிகள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
Tags:    

Similar News