செய்திகள்
செர்கே லாவ்ரோவ்

ரஷ்ய வெளியுறவு மந்திரி இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

Published On 2021-04-01 22:39 GMT   |   Update On 2021-04-01 22:39 GMT
ரஷ்ய வெளியுறவுத் துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் வரும் திங்கட்கிழமை இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
மாஸ்கோ:

ரஷ்ய நாட்டு வெளியுறவு அமைச்சக பெண் செய்தி தொடர்பு அதிகாரி மரியா ஜகரோவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்தப் பயணத்தில் அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவித்தார்.

இரு நாட்டு வெளிவிவகார அமைப்புகளின் தலைவர்களும், இருதரப்பு உறவுகளின் நடப்பு நிலை பற்றி ஆலோசனை மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற உள்ள உயர்மட்ட அளவிலான கூட்டத்திற்கு தயாராவது பற்றியும், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் ஒத்துழைப்புடன் செயல்படுவது உள்ளிட்டவையும் ஆலோசனையில் இடம்பெறும்.

இதேபோல், மண்டல மற்றும் சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகளை பற்றிய முக்கிய விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். ஐ.நா., பிரிக்ஸ் உள்பட சர்வதேச அரங்கில் ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான பேச்சுவார்த்தைக்கான அணுகுமுறைகளைப் பற்றி ஆய்வு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இந்திய சுற்றுப்பயணம் நிறைவடைந்த பின் ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் நாட்டுக்கு லாவ்ரோவ் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News