செய்திகள்
பூக்கள்

ஆயுத பூஜையையொட்டி வேலூர் மார்க்கெட்டில் ரூ.3 கோடிக்கு பூ, பழங்கள் விற்பனை

Published On 2020-10-26 10:00 GMT   |   Update On 2020-10-26 10:00 GMT
ஆயுத பூஜையையொட்டி வேலூர் மார்க்கெட்டில் ரூ.3 கோடிக்கு பூ, பழங்கள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி பூ, பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. ஆந்திர மாநிலம் கடப்பா, ராயகோட்டா மற்றும் ஓசூர், வேலூர் மாவட்டம் லத்தேரி, புலிமேடு பகுதிகளில் இருந்து பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்த மார்க்கெட்டில் மட்டும் ரூ.80 லட்சம் வரை பூக்கள் விற்பனையாகி உள்ளது.

மாவட்டம் முழுவதும் ரூ.1 கோடிக்கு மேல் பூக்கள் விறபனையாகி உள்ளன. இன்று பூக்கள் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிலோ ரூ.500க்கு விற்பனையான முல்லை, மல்லி ரூ.270, சாதிமல்லி ரூ.220, சம்பங்கி ரூ.130, கனகாம்பரம் ரூ.1000க்கு விற்பனையானது.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு வந்த சுமார் 6 டன் ஆப்பிள், 10 டன் எலுமிச்சை, 8 டன் கொய்யா, 10 டன் சாத்துக்குடி விற்பனையாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் ரூ.2 கோடிக்கு பழங்கள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.75 லட்சத்துக்கு மேல் பூ, பழங்கள் விற்பனையாகி உள்ளது.

இந்த ஆண்டு கொரோனா ஏற்படுத்திய பாதிப்பினால் மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனை வீழ்ச்சி அடைந்து விட்டது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை பூவியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகம் கூறியதாவது:-

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பூக்கள் விற்பனை மிகவும் வீழ்ச்சி அடைந்து விட்டது. மொத்தம் 10 டன் பூக்கள் மட்டும் விற்பனையாகியுள்ளது . இந்த ஆண்டு பூக்களுக்கு நல்ல விலை இருந்தபோதிலும் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு விட்டது.

கடந்த ஆண்டு பூக்கள் ரூ.50 லட்சத்துக்கும் மேல் விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.20 லட்சத்திற்கு மட்டுமே விற்பனையாகியுள்ளன.

இதனால் வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை.

உற்பத்தி குறைந்ததால் விவசாயிகளும் அதிக லாபம் ஈட்ட முடியவில்லை என்றார்.

திருவண்ணாமலையில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு தேங்காய், பழம், பொரி மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு பழங்களின் விற்பனையும் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.

இதனால் தற்காலிக கடை அமைத்த வியாபாரிகள் லாபம் ஈட்ட முடியவில்லை. இதுதொடர்பாக பழ வியாபாரிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு நவராத்திரி விழாவுக்கு பழங்கள் விற்பனை சொல்லும்படியாக இல்லை. பொதுமக்கள் பணத்தை பார்த்து பார்த்து செலவு செய்கின்றனர்.

எனவே குறைந்த அளவிலேயே பழங்களை வாங்கி சென்றனர். இதனால் கடந்த ஆண்டு விற்பனையானதில் 3-ல் ஒரு பங்குதான் விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.75 லட்சம் வரை பழங்கள் விற்பனையானது இந்த ஆண்டு ரூ.25 லட்சம் வரைதான் விற்பனையாகி உள்ளது என்றனர்.

Tags:    

Similar News