செய்திகள்
கொரோனா வைரஸ்.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள்,ஆசிரியைகள் உள்பட 6பேருக்கு கொரோனா - தலைமையாசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு

Published On 2021-09-14 07:28 GMT   |   Update On 2021-09-14 07:28 GMT
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்ட அளவில் மொத்த பாதிப்பு 91,285 ஆக உள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் தொற்று பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 937 ஆக உள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை, 89,409 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 6 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில்  தற்போது மாணவர்கள் 4பேர் மற்றும் 2ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம் சாமளாபுரம் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்-ஆசிரியை உள்பட 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி கூறுகையில், பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் பெற்றோருக்கு தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில்  பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள்  மற்றும் ஊழியர்கள் என 600 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. 

அதில் 3 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. மேலும் ஆசிரியை ஒருவருக்கும் தொற்று உறுதியானது. மாணவர்கள் 2  பிரிவுகளாக பள்ளிக்கு வருவதால் மீதமுள்ள 437 பேருக்கு பரிசோதனை நடந்தது. அதன் முடிவுகள் இன்று வரும். மொத்தம், 1,037 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது.

தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு 3  நாட்கள் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றார்.மேலும் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமியம்மாள் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர் கடந்த வாரம் முதலே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு வரவில்லை.

பரிசோதனை செய்ததில்  அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து 220 மாணவர்கள், 11 ஆசிரியர்கள்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதேப்போல் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் தொற்று உறுதியானது. பாதிப்புக்குள்ளான அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

இந்தநிலையில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பின் அதுகுறித்த விவரங்களை திரட்ட, ‘கூகுள் ஷீட்’ படிவம் அனைத்து பள்ளி களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளிகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர் யார், எத்தனை பேர் என்ற விவரத்தினை பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர்கள் ஒவ்வொரு நாளும் மதியம் 1 மணிக்குள் பூர்த்தி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News