செய்திகள்
கொல்வேல் பகுதியில் மண் சரிவால் மரம் சாய்ந்து வெற்றிலை கொடிகள் சேதமாகி கிடக்கும் காட்சி

திருவட்டார் பகுதியில் மண் சரிவால் பாதித்த வெற்றிலைக் கொடிகள்

Published On 2021-05-13 09:44 GMT   |   Update On 2021-05-13 09:44 GMT
கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு வகை கசாயம் தயாரிக்க வெற்றிலை அதிகமாக பயன்படுகிறது. இதனால் சந்தையில் வெற்றிலைக்கான தேவை அதிகரித்துள்ளது.
திருவட்டார்:

குமரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு விவசாயம்தான் இன்றும் வாழ்வாதாரமாக இருக்கிறது.

குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள 2-ம் நிலை நகரம் திருவட்டார். மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியான இங்கு பல்வேறு வகையான பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.

தென்னை, கமுகு, ரப்பர் உள்பட ஏராளமான பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. இங்குள்ள கொல்வேல், மாங்குளம் பகுதிகளில் விவசாயிகள் தென்னை, கமுகு, ரப்பர் மரங்களில் வெற்றிலை கொடிகளை ஊடு பயிர்போல் வளர்த்து வருகின்றனர்.

வாழை, தென்னை, ரப்பர் இவற்றில் கொடிகளை படரவிட்டு வெற்றிலை செடிகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோல் வெற்றிலைக் கொடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிற பகுதிகளில் விளையும் வெற்றிலையை விட, இப்பகுதியில் விளையும் வெற்றிலை சுவைமிக்கதாக கருதப்படுகிறது. இதனால் கும்பகோணம் வெற்றிலை போல் இங்கு விளையும் வெற்றிலைக்கும் நல்ல மவுசு இருக்கிறது.

இதனால் வெற்றிலை வியாபாரிகள் பிற இடங்களில் இருந்து இங்கு நேரில் வந்தும் வெற்றிலை விவசாயிகளிடம் இருந்து விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

இதுபோல் குலசேகரம், திருவட்டார் சந்தைகளில் விவசாயிகள் நேரில் சென்றும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தில் உள்ள சிறிய கடைகளுக்கு நேரடியாகவும் வியாபாரிகள் விற் பனை செய்கிறார்கள். பிற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கியும் செல்வதும் உண்டு.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு மலையோர பகுதிகளில் சற்று அதிக அளவில் மழை கொட்டி வருகிறது.

இந்த மழையால் கொல்வேல், மாங்குளம் மடத்துவிளை பகுதியில் அடிக்கடி சிறிய அளவில் மண் சரிவு ஏற்படுகிறது. இதனால் தென்னை, கமுகு, ரப்பர் மரங்கள் முறிந்து விழுகின்றன. இவற்றில் படரவிட்டு வளர்க்கப்படும் வெற்றிலைக்கொடிகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் வெற்றிலை கொடிகள் நடவு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு வகை கசாயம் தயாரிக்க வெற்றிலை அதிகமாக பயன்படுகிறது. இதனால் சந்தையில் வெற்றிலைக்கான தேவை அதிகரித்துள்ளது. நியாயமான விலையும் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் இங்கு பெய்து வரும் மழையால் வெற்றிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மழையினால் பாதித்துள்ள தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெற்றிலையின் தாயகமாக மலேசியா கருதப்படுகிறது. அதிக அளவில் இந்தோனேசியா நாட்டில் வெற்றிலை நடவு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப மங்கள நிகழ்ச்சி கள் மற்றும் கோவில் பூஜைகளில் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. வயதானவர்கள் வெற்றிலை மெல்லுவதும் பரவலாக உள்ளது.



Tags:    

Similar News