செய்திகள்
கோப்புப்படம்

தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனை நிறுத்தி நடத்திய ஒத்திகையால் 22 நோயாளிகள் பலியா?

Published On 2021-06-08 18:59 GMT   |   Update On 2021-06-08 18:59 GMT
உத்தரபிரதேச தனியார் ஆஸ்பத்திரியில், வேண்டுமென்றே ஆக்சிஜனை நிறுத்தி ஒத்திகை நடத்தியதால் 22 நோயாளிகள் பலியானதாக வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆக்ரா:

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பாராஸ் என்ற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. கடந்த ஏப்ரல் 26-ந் தேதி நிலவரப்படி, அங்கு 97 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த சமயத்தில், அங்கு கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்தநிலையில், அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளர் அறிஞ்சய் ஜெயின், சிலருடன் உரையாடுவது போன்ற 4 வீடியோக்கள் நேற்று வெளியாகின. ஏப்ரல் 28-ந் தேதி எடுக்கப்பட்ட அதில், தனது ஆஸ்பத்திரியில், வேண்டுமென்றே ஆக்சிஜனை நிறுத்தியதால், 22 நோயாளிகள் இறந்ததாக அறிஞ்சய் ஜெயின் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.



வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆக்சிஜன் சப்ளை கிடையாது என்று முதல்-மந்திரி சொல்லி விட்டார். மோடி நகரிலும் ஆக்சிஜன் கிடைக்கவில்லை. நமது ஆஸ்பத்திரி நோயாளிகளின் குடும்பத்தினரிடம் இதை சொன்னோம். சிலர் டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். வேறு சிலர் வெளியேற மறுத்தனர்.அதனால், ஆக்சிஜனை 5 நிமிடத்துக்கு நிறுத்திவைத்து ஒத்திகை நடத்த முடிவு செய்தோம். யார் சாகிறார்கள்? யார் பிழைக்கிறார்கள் என்று பார்க்க தீர்மானித்தோம். ஏப்ரல் 26-ந் தேதி காலை 7 மணிக்கு ஆக்சிஜன் சப்ளையை 5 நிமிடங்கள் நிறுத்தி வைத்தோம். அது யாருக்கும் தெரியாது. அந்த 5 நிமிடத்தில், 22 நோயாளிகள் இறந்து விட்டனர். அவர்களின் உடல்கள் நீலநிறமாக மாறிவிட்டன.

இவ்வாறு அவர் வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த 4 வீடியோக்களும் ‘வைரல்’ ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. ஆனால், அவை வெட்டி ஒட்டப்பட்டுள்ளதாக அறிஞ்சய் ஜெயின் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து ஆக்ரா மாவட்ட கலெக்டர் பிரபு நாராயணன் சிங் கூறியதாவது:-

கடந்த ஏப்ரல் 26 மற்றும் 27-ந் தேதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது உண்மைதான். ஆனால், சுகாதாரத்துறையுடன் இணைந்து ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டோம். ஏப்ரல் 26-ந் தேதி, பாராஸ் ஆஸ்பத்திரியில் 97 கொரோனா நோயாளிகள் இருந்தனர். அரசு கணக்குப்படி, அவர்களில் 4 பேர் இறந்து விட்டனர். எனவே, இது நம்பகமான வீடியோவாக தெரியவில்லை. இருப்பினும், அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இச்சம்பவத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘பா.ஜனதா ஆட்சியில் ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு, மனிதாபிமானத்துக்கும் தட்டுப்பாடு. இந்த கொடிய குற்றத்துக்கு காரணமான அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘இதற்கு யார் பொறுப்பு?’’ என்று அவர் கேட்டுள்ளார்.
Tags:    

Similar News