ஆன்மிகம்
கருவூலத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட வைரமுடிக்கு கோவிலில் வைத்து சிறப்பு பூஜை நடந்த போது எடுத்த படம்.

செலுவநாராயணசாமி கோவிலில் வைரமுடி உற்சவம்

Published On 2021-03-25 05:31 GMT   |   Update On 2021-03-25 05:31 GMT
மேல்கோட்டையில் புகழ்பெற்ற செலுவநாராயணசாமி கோவிலில் வைரமுடி உற்சவம் கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடந்தது.
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் மேல்கோட்டையில் பிரசித்தி பெற்ற செலுவநாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது வைரமுடி திருவிழா. இந்த திருவிழாவையொட்டி சாமிக்கு வைர கிரீடம் அணிவிக்கப்படும். பின்னர் அந்த வைர கிரீடம் அணிந்த செலுவநாராயணசாமி கோவில் வளாகத்தில் திருவீதி உலா வருவார். இதை பார்க்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வைர முடி உற்சவ விழா நேற்று கோவிலில் நடந்தது. எப்போதும் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த வைரமுடி உற்சவ விழாவில் பங்கேற்பார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த விழாவில் வெளிமாவட்டம், வெளிமாநில பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதுவும் கோவிலுக்குள் 200 பேரும், கோவிலுக்கு வெளியே 2 ஆயிரம் பேரும் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இதனால் நேற்றைய வைர முடி உற்சவம் எளிமையாக நடந்தது. இதையொட்டி நேற்று காலை மாவட்ட கருவூலத்தில் இருந்து வைர கிரீடம் கலெக்டர் அஸ்வதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு பூஜை நடத்தி ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. வழியில் மண்டியா லட்சுமி ஜனார்த்தனா கோவிலில் வைர கிரீடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அந்த வைர கிரீடம் மேல்கோட்டை செலுவநாராயணசாமி கோவிலை வந்தடைந்தது. அங்கு அந்த வைர கிரீடத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் அந்த வைர கிரீடத்தை தரிசனம் செய்தனர். இரவு 8.30 மணி அளவில் செலுவநாராயண சாமிக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் வைர கிரீடம் சாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து வைர கிரீடத்துடன் செலுவநாராயணசாமி தேரில் எழுந்தருளி, கோவிலின் ராஜவீதிகளில் வலம் வந்தார். அப்போது பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

இந்த தேரோட்டம் விடிய, விடிய நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக 12.30 மணி அளவில் இந்த தேரோட்டம் முடிக்கப்பட்டது.

இதையொட்டி மேல்கோட்டை நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் ஆங்காங்கே போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து வெளிமாவட்டம், வெளிமாநில பக்தர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு வைரமுடி உற்சவம் ரத்து செய்யப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News