ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ந் தேதி தொடங்குகிறது

Published On 2020-10-09 08:15 GMT   |   Update On 2020-10-09 08:15 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி மட்டும் எழுந்தருளும் நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்தாண்டு நவராத்திரி உற்சவ விழா வருகிற 17-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார்.

மேலும் திருவிழா நாட்களில் மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடைபெறும். திருவிழாவையொட்டி சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலுசாவடிக்காக தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்படும். அங்கு மீனாட்சியின் மகிமை, சுந்தரேசுவரரின் திருவிளையாடலை விளக்கும் கொலு பொம்மைகள் மற்றும் சிவன் மற்றும் சக்தியின் அம்சங்கள் குறித்த பொம்மைகள் இடம் பெறும்.

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறுதியில் அனைத்து மத கோவில்களும் மூடப்பட்டது. தற்போது தொற்று குறைந்ததால் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் கடந்த மாதம் திறக்கப்பட்டது. அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். ஆனால் கோவில் திருவிழாவின் போது கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற இருந்த பல்வேறு திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா நடைபெறுமா என்பது பற்றி இதுவரை அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலில் பெரிய திருவிழாவான நவராத்திரி விழாவின் போது பக்தர்கள் அதிகமாக வருவார்கள். மேலும் கொலுச்சாவடி அமைப்பதற்கான வேலைகள் அனைத்தும் 10 நாட்களுக்கு முன்பே தொடங்கி விடும். ஆனால் தற்போது வரை அதற்கான வேலைகள் எதுவும் தொடங்கப்படாமல் இருப்பதாக தெரியவருகிறது.

மேலும் கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி மட்டும் எழுந்தருளும் நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொலுசாவடியில் பொம்மைகள் இல்லாமல் திருவிழா நடத்தப்பட்டால் அது திருவிழா நடத்துவதற்கான முழுமை பெறாது என்று பக்தர்கள் கருதுகிறார்கள். எனவே கொலுசாவடியில் பொம்மைகள் வைத்து, அனைத்து நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி விழாவை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News