செய்திகள்
கோப்புபடம்

உடுமலை பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி - குவிண்டால் ரூ.1900க்கு விற்பனை

Published On 2021-10-22 06:43 GMT   |   Update On 2021-10-22 06:43 GMT
கிணற்றுப்பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் தற்போது ஒரு சில பகுதிகளில் அறுவடை நடந்து வருகிறது.
உடுமலை:

உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனத்தில் 40 ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கிணற்றுப்பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் தற்போது ஒரு சில பகுதிகளில் அறுவடை நடந்து வருகிறது. உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூட களங்களுக்கு கொண்டு வந்து விவசாயிகள் காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். 

இதுகுறித்து ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் கூறியதாவது:

உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை சீசன் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை காணப்படும். கிணற்றுப்பாசனத்தில் சாகுபடி செய்த மக்காச்சோளம் தற்போது வரத்து தொடங்கியுள்ளது. 

பி.ஏ.பி., 4-ம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை டிசம்பர் மாதத்தில் தொடங்கும். தற்போது  கர்நாடக மாநிலத்திலிருந்து 35 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள மக்காச்சோளமும் வரத்து காணப்படுகிறது.

கோழித் தீவன உற்பத்திக்காக ஒரு சில நிறுவனங்கள், வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்து, இங்கு காய வைத்து விற்பனை செய்கின்றனர். கடந்த மாதம் குவிண்டால் ரூ. 2,300 வரை விற்று வந்தது.

தற்போது வெளிமாநிலம் மற்றும் உள்ளூர் வரத்து காரணமாக சற்று குறைந்து ரூ. 1,900 முதல் ரூ.1,950 வரை விற்று வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News