செய்திகள்
வன்முறை நடந்த பகுதியில் பாதுகாப்பு

வன்முறை எதிரொலி- கூஜ்பெகர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் நுழைய தடை

Published On 2021-04-10 17:28 GMT   |   Update On 2021-04-10 17:28 GMT
மேற்கு வங்கத்தில் வன்முறையைத் தொடர்ந்து, ஏப்ரல் 17ம்தேதி நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பிரசார காலம் குறைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் இன்று நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கூஜ்பெகர் மாவட்டம், சிடால்குச்சி தொகுதியில் உள்ள 126வது வாக்குச்சாவடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய போலீஸ் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 4 பேர் உயிரிழந்தனர். வன்முறையைத் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது திட்டமிட்ட சதி என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கூஜ்பெகர் மாவட்டத்தில் பதற்றம் நிலவுவதால், அந்த மாவட்டத்திற்குள் அடுத்த மூன்று நாட்களுக்கு அரசியல் கட்சியினர் யாரும் நுழையக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அத்துடன் ஏப்ரல் 17ம்தேதி நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பிரசார காலமும் குறைக்கப்பட்டுள்ளது. 

தவறான புரிதல் காரணமாக உள்ளூரைச் சேர்ந்த கும்பல், மத்திய பாதுகாப்பு படையினரை தாக்கியதால் மோதல் ஏற்பட்டதாகவும், பாதுகாப்பு படையினர் தங்களையும், வாக்குப்பதிவு எந்திரங்கள் போன்ற அரசு சொத்துக்களையும் பாதுகாக்கும்பொருட்டு துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

வன்முறை நடந்த பகுதிக்கு நாளை செல்ல உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்திருந்த நிலையில், தலைவர்கள் யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News