செய்திகள்
வாட்டாள் நாகராஜ்

வருகிற 5-ந் தேதி நடைபெறும் முழு அடைப்பை தோற்கடிக்க கர்நாடக அரசு சதி: வாட்டாள் நாகராஜ்

Published On 2020-11-23 03:30 GMT   |   Update On 2020-11-23 03:30 GMT
வருகிற 5-ந் தேதி நடைபெறும் முழு அடைப்பை தோற்கடிக்க கர்நாடக அரசு சதி செய்வதாக வாட்டாள் நாகராஜ் கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக அரசு, மராட்டிய சமூக மேம்பாட்டு வாரியம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இதற்கு கன்னட சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், மராட்டிய சமூக மேம்பாட்டு வாரிய அமைப்பதை கண்டித்து வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதற்கு கர்நாடக ரக்‌ஷண வேதிகே உள்பட பல சங்கங்கள் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளன. முழு அடைப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் திட்டமிட்டபடி வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு நடைபெறும் என்று வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக ராஜ்யோத்சவா விழாவுக்கு எதிராக மராட்டிய அமைப்புகள் கருப்பு தினத்தை அனுசரிக்கின்றன. அத்தகைய மராட்டிய மக்களின் மேம்பாட்டிற்கு இந்த புதிய வாரியத்தை அரசு அமைக்கிறது. ரூ.50 கோடி நிதி ஒதுக்குவதாக கூறியுள்ளது. ஆனால் கன்னட அமைப்புகள், கர்நாடகத்தின் இனம், மொழி, நீர், நிலம் ஆகியவற்றுக்காக தீவிரமாக போராடுகின்றன. ஆனால் இந்த அமைப்புகளுக்கு அரசு வழங்கும் நிதி உதவியை நிறுத்தியுள்ளன. இது என்ன நியாயம்?.

சட்ட சிக்கல் இருப்பதால் மராட்டிய மேம்பாட்டு ஆணையம் என்பதற்கு பதிலாக மராட்டிய சமூக மேம்பாட்டு வாரியம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை கன்னட அமைப்புகள் எதிர்ப்பதால், நிதி உதவியை அரசு நிறுத்தி அரசியல் செய்கின்றன. எங்களை அரசு மிரட்டுகிறது. இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். ராஜ்யோத்சவா விழாவை நடத்த நான் கடந்த 1962-ம் ஆண்டு முதல் நிதி உதவியை பெற்று வருகிறேன். கன்னட கலாசாரத்துறை 2,000 கன்னட சங்கங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. அந்த உதவியை நிறுத்தி இருப்பது சரியல்ல.

அரசு என்ன மிரட்டல் விடுத்தாலும் நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். வருகிற 5-ந் தேதி திட்டமிட்டபடி முழு அடைப்பு நடத்துவோம். இந்த முழு அடைப்பை தோற்கடிக்க கர்நாடக அரசு சதி செய்துள்ளது. அரசு வழங்கும் நிதி உதவியை எனது சொந்த செலவுக்கு பயன்படுத்தவில்லை. அதை ராஜ்யோத்சவா விழா நடத்தவே பயன்படுத்தி வந்துள்ளேன்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

Tags:    

Similar News