உள்ளூர் செய்திகள்
தமிழக கவர்னர்

நீட் தேர்வு விவகாரம்- கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தும் கட்சிகள்

Published On 2022-01-08 08:10 GMT   |   Update On 2022-01-08 08:10 GMT
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதாவை இதுவரையில் ஜனாதிபதிக்கு அனுப்பாத கவர்னரை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை:

அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த பிறகு சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அரசிலமைப்பு சட்டம் 200-வது பிரிவின் கீழ் சட்டபேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவை மூன்று மாதத்துக்குள் கவர்னர் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும். அப்படி அவர் அனுப்பவில்லையென்றால் சட்ட மசோதாவை அவமதிப்பதாக அர்த்தம்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதாவை இதுவரையில் ஜனாதிபதிக்கு அனுப்பாத கவர்னரை திரும்ப பெற வேண்டும்.

அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜனதா தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் இதற்கு ஒருமித்த ஆதரவு தெரிவித்துள்ளன.

விடுதலை சிறுத்தை கட்சி பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன்:-

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தீர்மானத்தை நான்கு மாதமாக கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை. கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும். தமிழக எம்.பி.க்கள் அனைவரையும் உள்துறை மந்திரி அமித்ஷா சந்திக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. அதை முறைப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வட்டி இல்லாமல் அரசு கடன் வழங்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு ராமசந்திரன்:- நீட் தேர்வால் மருத்துவ படிப்பு மட்டுமல்ல உயர்க்கல்வி படிக்கும் மாணவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மாணவர்கள் கனவு சிதைந்து விடுகிறது. நான்கு மாதங்களாக நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருக்கும் கவர்னரை கண்டிக்கிறோம்.



தமிழக எம்.பி.க்களை உள்துறை மந்திரி சந்திக்காமல் இருப்பது தமிழக மக்கள், மாணவர்களை அவமதிக்கும் செயலாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நாகை மாலிக்:- சமூகநீதியின் விளை நிலமாக இருக்கும் தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை. இது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 4 மாதங்கள் ஆகியும் கவர்னர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் உள்ளார். இது கண்டனத்துக்குரியது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்:- சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு வேண்டுமென்றே அனுப்பாமல் கவர்னர் காலம் தாழ்த்தி வருகிறார். அதுபோல் தமிழக எம்.பி.க்கள் 3 முறை அமித்ஷாவை சந்திக்க சென்றும் பார்க்கவில்லை. இது 8 கோடி தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து சென்றது போல தமிழகத்திலும் நீட் தேர்வு விலக்குக்காக மக்கள் புரட்சி ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News