வழிபாடு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது

Published On 2022-02-19 07:11 GMT   |   Update On 2022-02-19 07:11 GMT
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 26-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 28-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை (20-ந்தேதி) தொடங்கி மார்ச் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமிக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் சாத்தப்பட்டு பல்வேறு வாகனங்களில் பெருமான் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள தென்மாடவீதி, துளசிங்கப் பெருமாள் கோவில் தெரு, சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு மற்றும் திருக்குளத்தை சுற்றியும் திருவீதி புறப்பாடு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாளை இரவு புன்னை மர வாகனம், 21-ந்தேதி காலை சேவு வாகனம், இரவு சிம்ம வாகனத்தில் வீதி உலா வருகிறார். 22-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கருட சேவை நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது. இரவு 7.45 மணிக்கு அம்ச வாகனம், 23-ந்தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகனத்திலும், 24-ந்தேதி காலை பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

25-ந்தேதி அதிகாலை 5.15 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. காலையில் ஆனந்த வாகனத்திலும் இரவு யானை வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

7-ம் நாள் திருவிழாவான 26-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 2.15 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7 மணிக்கு பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது.

27-ந்தேதி காலை பல்லக்கில் வெண்ணை தாழி கண்ணன் திருக்கோலத்திலும் இரவில் குதிரை வாகனத்திலும், 28-ந்தேதி காலை ஆளும் பல்லக்கிலும், இரவு கண்ணாடி பல்லக்கிலும் வீதி உலா நடக்கிறது. அன்று பகல் 11 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. மார்ச் 1-ந்தேதி அவரோ ஹனம், துவாதச ஆராதனம், சப்தாவர்ணம்- சிறிய திருத்தேர் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News