இந்தியா
ஒமைக்ரான் வைரஸ்

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல்- அனைத்து மாநிலங்களிலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்

Published On 2021-12-03 12:10 GMT   |   Update On 2021-12-03 12:10 GMT
ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் அல்லது அந்த நாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கான பயண ஆலோசனைகளில் ஈடுபட்டு உள்ளது.

புதுடெல்லி:

தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்ட அந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும், வேகமாக பரவக்கூடியது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் தென்ஆப்பிரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி உள்ளது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் இந்தியாவுக்குள்ளும் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது. கர்நாடகாவின் பெங்களூரில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியதுமே மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.

இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது.

ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் அல்லது அந்த நாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கான பயண ஆலோசனைகளில் ஈடுபட்டு உள்ளது.

ஆர்.டி-பி.சி.ஆர். சோதனையில் கொரோனா இல்லை என்ற உத்தரவாதம் அவசியம். ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாட்டில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் நடத்தப்படும் சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் தான் அங்கிருந்து வெளியேற முடியும்.

அனைத்து சர்வதேச விமான பயணிகளும் தங்களது 14 நாட்களின் பயண விவரங்களை அளிக்க வேண்டும். ஒமைக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சோதனை மற்றும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அந்த நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்துக்கு வந்த பிறகு கொரோனா சோதனை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.

பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தபிறகு விமான நிலையத்தில் இருந்து புறப்படலாம்.

ஆனால் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 8-வது நாளில் மீண்டும் சோதனை செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து 7 நாட்கள் சுயகண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நட வடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

விமான நிலையங்களில் பயணிகளுக்கு தீவிர சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் முதல் முதலில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ள கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

ஒடிசா மாநிலத்தில் அனைத்து கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் வருகிற 31-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. குஜராத்தின் 8 நகரங்களில் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் திருமண நிகழ்ச்சி மற்றும் இறுதி சடங்கில் கூட்டம் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் குறைந்த அளவிலேயே பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசு ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. விமான பயணிகள் 2, 4 மற்றும் 7-வது நாளில் கண்டிப்பாக ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனைகளை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விமான பயணிகள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டற்கான சான்றிதழ்களை அளிக்க வேண்டும். அவர்களும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளும் மும்பையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்படுகிறது.

இதே போன்று தலைநகர் டெல்லி உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் வைரஸ் பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

Tags:    

Similar News