செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியத்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்- மு.க.ஸ்டாலின்

Published On 2021-08-15 08:42 GMT   |   Update On 2021-08-15 08:42 GMT
எத்தனையோ முதல்-அமைச்சர்கள் வந்தாலும், அவர்களுக்கும் கொடியேற்றும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தவர் கருணாநிதி என சுதந்திர தின விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை:

சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாட்டு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களே! சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களே ‘நீதியரசர்களே! அமைச்சர் பெருமக்களே! பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே! தலைமைச் செயலாளர் முதலிய அரசு அதிகாரிகளே! காவல்துறைத் தலைவர் முதலிய காவல் அதிகாரிகளே! சுதந்திர போராட்டத் தியாகிகளே! அவர்களது குடும்பத்தினரே! மாணவச் செல்வங்களே! வணக்கம்.

இந்தியா தனது 75-வது சுதந்திர நாளை கொண்டாடும் மகத்தான இப்பொழுதில், கோட்டை  கொத்தளத்தில் கொடி ஏற்றும் மாபெரும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை நினைத்து மகிழ்கிறேன். சுதந்திர நாளன்று யார் முதல்-அமைச்சராக இருக்கிறார்களோ, அவர்கள்தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

ஆகஸ்டு-15 சுதந்திர தின  நாளன்று முதல்-அமைச்சரும், ஜனவரி 26 குடியரசு நாளன்று ஆளுநரும் கொடியேற்றலாம் என்ற ஆலோசனையை அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருக்கு சொல்லி அதனை ஏற்றுக் கொள்ள வைத்தவர் கலைஞர். 15.8.1974 அன்று முதன் முதலாக இந்தக் கோட்டையில் ஒரு முதல்-அமைச்சராக கொடி ஏற்றினார் முதல்- அமைச்சர் கலைஞர்.



அதன் பிறகு எத்தனையோ முதல்-அமைச்சர்கள் வந்தாலும், அவர்களுக்கும் கொடியேற்றும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தவர் கலைஞர். தமிழ்நாட்டு முதல்-அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் அந்த உரிமையைப் பெற்றுக்கொடுத்த மாபெரும் சுதந்திர சிந்தனையாளர்தான் கலைஞர். அவரை வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன்.

இன்று  இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான பெருமைகள் இந்த ஆண்டுக்கு இருக்கின்றன.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவை குடியரசுத்தலைவரை அழைத்து சில நாட்களுக்கு முன்னால் நடத்தினோம். திராவிட இயக்கத்தின் ஆணிவேராகத்திகழ்ந்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததன் நூற்றாண்டு விழாவும் இந்த ஆண்டுதான். தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய மகாத்மா காந்தி மதுரைக்கு வருகை தந்தபோது ஏழைத் தமிழ் மக்களைப் பார்த்து தனது உயர்ரக ஆடையைக்  களைந்து அரையாடை உடுத்தத் தொடங்கியதன் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.
 
செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்றெல்லாம் போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்தநாள் கொண்டாட இருப்பதும் இந்த ஆண்டுதான். சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதி மறைந்து 100 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆண்டோடு இப்படி எவ்வளவோ வரலாற்றுப் புகழ் பெற்ற ஆண்டாக இந்த 2021-ம் ஆண்டு அமைந்துள்ளது.

தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்படும் பெருமிதம் என்ன என்றால் நமது அரசு ஆறாவது முறையாக ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து இருக்கிறது. எனது பொது வாழ்க்கையில் அரை நூற்றாண்டு காலம் உழைத்து நான் தமிழ்நாட்டு மக்களால் முதல்-அமைச்சராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்ற மகிழ்ச்சியுடன் இந்த விழாவில் நான் கலந்து கொண்டுள்ளேன்.
சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ்மண்.

பூலித்தேவர், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், தளபதி சுந்தரலிங்கம், ஊமைத்துரை, தீரன் சின்னமலை, சின்னமருது, பெரிய மருது, வ.உ.சி., மகாகவிபாரதி, சுப்பிரமணிய சிவா, டி.எஸ்.எஸ்.ராஜன், தில்லையாடி வள்ளியம்மை, தந்தை பெரியார், திரு.வி.க., நாமக்கல் ராமலிங்கம், ம.வெ.சிங்காரவேலர், பாரதிதாசன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,
திருப்பூர் குமரன், ராஜாஜி, காமராஜர், ஏ.எம்.ஈஸ்வரன், ஓமந்துரார் ராம்சாமி, ஜீவா, கேப்டன் லட்சுமி, மா.பொ.சிவஞானம், கே.பி.சுந்தராம்பாள் ஆகியோர் இத்தகைய  தமிழ்நாட்டு தியாகிகளின் மூச்சுக்காற்றை கொண்டு கட்டப்பட்டதுதான் இந்த நினைவுத்தூண்.

இந்திய விடுதலை போராட்டத்துக்கு தமிழ்நாடு அளித்த பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தயாரித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடும் முயற்சியை தமிழ்நாடு அரசு உறுதியாக செய்யும்.

நான் சொன்ன தியாகிகள், தமிழ்நாட்டு தியாகிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் தியாகிகள். விடுதலை போராட்டத்தில் கலந்துகொண்டு நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் உதவிகள் வழங்குவதில் தமிழ்நாடு அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.

அந்த வகையில் மாநில அரசால் விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை 17 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ஆகவும், குடும்ப ஓய்வூதியத்தொகை 8,500 ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படும் என்பதை இந்த வேளையில் பெருமிதத் தோடு தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டு விடுதலை தியாகிகளை நினைவு கூர்வதில் நமது அரசு எப்போதும் தவறியது இல்லை.

‘எல்லார்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி செல்லட்டும் இந்த வையகம்’ என்பதை போன்ற பொற்காலத்தை உருவாக்க உறுதி கொண்டுள்ளது இந்த அரசு.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Tags:    

Similar News