செய்திகள்
சிங்கங்கள்

வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு சிங்கத்தின் உடல்நிலை மோசமானது- டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு

Published On 2021-06-10 08:47 GMT   |   Update On 2021-06-10 08:47 GMT
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 2 பெண் சிங்கங்களின் நிலையும் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளன.
தாம்பரம்:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கடந்த 3-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினமே நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தி கால்நடை மருத்துவ குழுவினர் தலைமையில் பூங்கா டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கவிதா, புவனா ஆகிய 2 பெண் சிங்கங்களின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அந்த 2 சிங்கங்களையும் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவ குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா? என்றும் அவர்கள் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 2 பெண் சிங்கங்களின் நிலையும் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளன.

இதற்கிடையே தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிங்கத்தின் உடல்நிலையும் மோசமானதாக தெரிகிறது. அதனை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கவிதா என்ற வயதான சிங்கத்தை தவிர மற்ற சிங்கங்கள் வழக்கமான உணவை சாப்பிடுவதாக வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News