செய்திகள்
குறளகத்தில் நடைபெற்று வரும் கொலு பொம்மைகள் கண்காட்சியில் பெண் அத்தி வரதர் சிலைகளை வாங்கியபோது எடுத்த படம்.

சென்னை குறளகத்தில் கொலு பொம்மைகள் விற்பனை: அத்திவரதர் சிலைக்கு அமோக கிராக்கி

Published On 2019-09-26 02:02 GMT   |   Update On 2019-09-26 02:02 GMT
சென்னை குறளகத்தில் நடைபெற்று வரும் கொலு பொம்மைகள் விற்பனையில் அத்திவரதர் சிலைக்கு அமோக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த சிலைகள் ரூ.400 முதல் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை :

தமிழகத்தில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் முப்பெரும் தேவிகளை வணங்கும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 10-வது நாள் விஜயதசமி நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் குழந்தைகளுக்கு முதல் முறையாக எழுதப்பழகும் ‘ஏடு தொடங்குதல்’ விழா நடைபெறும்.

நவராத்திரி விழாவில் முதல் 3 நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த 3 நாட்கள் சக்திக்கும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. கோவில்களில் இருக்கும் முப்பெரும் தேவியரும் நவராத்திரி காலங்களில் பக்தர்களின் வீடுகளில் வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம்.

நவராத்திரி விழாவின் போது, வீடுகளில் பொம்மைகளால் அலங்கரித்து கொலு அமைத்து விரதம் இருந்து தேவியை வணங்குவதுடன், வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கி தேவியின் பரிபூரண ஆசி மற்றும் அனைத்து சவுபாக்கியங்களையும் பெறலாம் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழாவை கொண்டாடுவதற்காக கொலு அமைப்பதற்கு தேவையான பொம்மைகளை சேகரிக்கும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் கடந்த 3-ந் தேதி முதல் தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் சார்பில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.

இங்கு தாவரங்கள், ஊர்வனங்கள், பறவைகள், விலங்குகளின் பொம்மைகள், செட்டியார்-செட்டியம்மை மற்றும் குபேர பொம்மைகள், தலையாட்டி பொம்மைகள், சங்கீத மூவர் பொம்மைகள், ஞானிகளின் பொம்மைகள், முப்பெரும் தேவிகளின் பொம்மைகள், அஷ்டலட்சுமி அவதாரம், விஷ்ணுவின் தசவாதாரம், நவநரசிம்மர், கைலாச ஈசன், பாற்கடலில் பள்ளி கொள்ளும் விஷ்ணு, சீதா கல்யாணம், மீனாட்சி கல்யாணம் என விதவிதமான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புது வரவுகளாக சிவகாமி விஷ்வரூபம், பத்ராச்சலம் ராமர் செட் மற்றும் 40 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் காட்சி அளித்த காஞ்சீபுரம் அத்திவரதர் சயனம் மற்றும் நின்ற கோல பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இதில், அத்திவரதர் பொம்மைகளுக்கு அமோக கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடைகளில் அத்திவரதர் பொம்மைகள் வந்த வேகத்தில் விற்று தீர்ந்து விடுவதாக பொம்மை வியாபாரி வசந்தி தெரிவித்தார். கடந்த 3 நாட்களில் மட்டும் 300 முதல் 500 அத்திவரதர் சிலைகள் விற்பனையாகி உள்ளன. அத்திவரதர் சிலைகள் ரூ.400 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு ரூ.50 முதல் ரூ.18 ஆயிரம் வரை பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

நெல்லை தியாகராய நகரை சேர்ந்த மரகதம் என்பவர் 44-வது ஆண்டாக கொலு அமைத்து நவராத்திரியை கொண்டாட உள்ளார். அவர் ஆண்டு தோறும் குறளகத்தில் வந்து புதிய வரவு பொம்மைகளை வாங்கி செல்கிறார். தம்மிடம் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொம்மைகள் இருப்பதாகவும், இந்த ஆண்டு புது வரவான அத்திவரதர் சிலைகளை வாங்கி சென்றதாகவும் தெரிவித்தார். 
Tags:    

Similar News