செய்திகள்
விழாவில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டபோது எடுத்த படம்

கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள கூடாது - தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

Published On 2019-11-18 03:24 GMT   |   Update On 2019-11-18 03:24 GMT
எந்த நிலை வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர, தற்கொலை செய்து கொள்ள கூடாது என கல்லூரி மாணவிகளுக்கு தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

புற்றுநோயில் இருந்து விடுபடுவதற்கான நிவாரணம், ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது தமிழிசை சவுந்தரராஜனை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் கணவர் டாக்டர் சவுந்தரராஜன், முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே, தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் என்.மயில்வாகனன், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் பாலகிரு‌‌ஷ்ணன், மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.வி.விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

தமிழகத்துக்கு வரவேண்டும் என்று நினைக்கும்போது, 2 நாட்களுக்கு முன்னதாகவே அம்மா வீட்டிற்கு செல்லும் குழந்தையின் மனநிலை எப்படி இருக்குமோ அந்த குதூகலம் என்னை தொற்றிக்கொள்கிறது.

ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஆண் இருப்பதாக எல்லாரும் கூறுவார்கள். ஆனால் எனது கணவர் எனக்கு பின்னால் அல்ல எனது பக்கத்தில் இருந்து அனைத்தையும் சொல்லிக்கொடுத்ததால் தான் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறேன்.



கல்லூரி மாணவிகள் யாரும் வாழ்க்கையை முடித்துக்கொள்ள (தற்கொலை செய்ய) நினைக்காதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. நாங்கள் ஸ்கேன் செய்யும்போது 2 சென்டி மீட்டர் தான் அந்த குழந்தை இருக்கும். அதற்குள் இதயத்துடிப்பு வரும்போது அதை பார்த்து அந்த அம்மா எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்.

ஆனால் அந்த இதயத்துடிப்பை நிறுத்தும் உரிமை உங்களுக்கு கிடையவே கிடையாது. எனவே, இளைய தலைமுறை எந்த நிலை வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்க வேண்டுமே, தவிர வீழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கவே கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News